ஓரியோவின் காப்பியா ஃபேபியோ? நீதிமன்ற படியேறிய கேட்பரி நிறுவனம்! பார்லே பிஸ்கட் விற்பனைக்கு தடை ஏன்?
டெல்லி: பார்லே நிறுவனம் வெளியிட்ட ஃபேபியோ என்ற பிஸ்கட் பிரபல ஓரியோ பிஸ்கட்போல் இருப்பதாக கேட்பரி நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் பார்லேவின் பிஸ்கட்டின் விற்பனையை நிறுத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் எத்தனையோ பிஸ்கட் நிறுவனங்கள் கிரீம் பிஸ்கட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், அனைத்தையும் தாண்டி விற்பனையில் சக்கைபோடு போட்டது கேட்பரி நிறுவனத்தின் ஓரியோ பிஸ்கட்.
வித்தியாசமான விளம்பரம், சுவை போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேப்டரி ஓரியோ பிஸ்கட்டின் பிரியர்களாக மாறினர்.

ஓரியோ பிஸ்கட்
இதனால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் பிஸ்கட்டாக ஓரியோ இருக்கிறது. ஏற்கனவே கேப்டரி நிறுவனத்தின் டைரி மில்க், பைவ் ஸ்டார், பெர்க் போன்ற சாக்லெட் வகைகள் இந்தியாவில் விற்பனையில் கடந்த பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த நிலையில், பிஸ்கட் வரிசையில் ஓரியோ தனி இடம் பிடித்தது.

பார்லேவின் ஃபேபியோ பிஸ்கட்
இந்தியாவில் பார்லே, சன்பீஸ்ட் என உள்நாட்டு பிஸ்கட் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுத்தது ஓரியோ. பிரிட்டானியா நிறுவனத்தின் கிரீம் பிஸ்கட்டுகளை மீறி பெரும் வரவேற்பை அது பெற்றது. இந்த நிலையில்தான் ஓரியோவுக்கு போட்டியாக பார்லே நிறுவனம் ஃபேபியோ என்ற பெயரில் கிரீம் பிஸ்கட்டை பதிவு செய்து தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டது.

ஓரியோவின் காப்பியா பேபியோ
வெண்ணிலா கிரீம் நிறப்பப்பட்ட சாக்லெட் சுவை கொண்ட பேபியோ பிஸ்கட்டின் வடிவமைப்பு கேட்பரி ஓரியோ போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக கேட்பரி மற்றும் பார்லே ஆகிய நிறுவனங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் பார்லே ஃபேபியோ நிறுவனத்துக்கு எதிராக கேட்பரி ஓரியோ நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
அதில் பார்லே நிறுவனம் ஃபேபியொ பிஸ்கட்டை பதிவு செய்ய முத்திரை விதிகளை மீறியதாக கேட்பரி நிறுவனம் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி ஹரி ஷங்கர், 2 பிஸ்கட்டுகளின் பெயர்களின் ஒலியும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்தார். "ஓரியோ பிஸ்கட்டை கடந்த முறை வாங்கிய ஒரு சாதாரண வாடிக்கையாளர், அடுத்த முறை தவறுதகாக ஃபேபியோ பிஸ்கட்டை வாங்க வாய்ப்பு உள்ளது." என்றார்.

ஒற்றுமைகள் உள்ளன
கடந்த 2020 ஆம் ஆண்டு கேட்பரி நிறுவனம் அளித்த புகாரில், பார்லே நிறுவனத்தால் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் சாக்லெட் - வெண்ணிலா கிரீம் பிஸ்கட்டிற்கும், ஏற்கனவே தங்களால் விற்பனை செய்யப்பட்டு வரும் ஓரியோ பிஸ்கட்டிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்து இருந்தது.

O வில் மட்டுமே ஒற்றுமை
இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய பார்லே தரப்பு வழக்கறிஞர், ஒரியோவுக்கும் ஃபேபியோவுக்கும் இடையே "O" என்ற ஒற்றை எழுத்தில் மட்டுமே ஒற்றுமை இருப்பதாகவும், மற்றபடி பார்வை, பெயரை ஒலிப்பது ஆகியவற்றில் ஓரியாவுக்கும் பேபியோவுக்கு வித்தியாசம் உள்ளது என்றார். அதேபோல் தங்கள் பிஸ்கட்டின் மேல் பகுதி ஒரே வடியில் இருக்காது என்றும் கூறி இருக்கிறது.

ஃபேபியோ விற்பனைக்கு தடை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் கேட்பரி ஓரியாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதாவது பார்லேவின் பேபியோ பிஸ்கட்டின் பெயரை ஒலிப்பது ஓரியோவை போல் இருப்பதாகவும், இரண்டு பிஸ்கட்டுகளின் மீது இருக்கும் குறியீடுகளும் ஒரே மாதிரியாக உள்ளது எனவும் கூறி அதன் விற்பனைக்கு தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications