டெல்லியில் மோதும் லாபி! ஆஹா "அப்பாவே" போய் பேசிட்டாராமே! தமிழக காங்கிரசுக்கு இவர்தான் அடுத்த தலைவர்?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் புதிய நபர் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கான தேசிய தலைவராக சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றார். இவர் பதவி ஏற்ற நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்களை மாற்றி மாநில வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். இளம் தலைவர்களை தலைவர் பதவிக்கு போட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றப்படாத நிலையில், உடனே தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கமிட்டி
பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இவர் டெல்லி தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதோடு டெல்லியின் குட் புக்கிலும் இருந்தார். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் இரண்டிலும் இவரின் தலைமைக்கு கீழ் தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து நன்றாக செய்யப்பட்டது. இதனால் டெல்லியின் கரிசனம் அப்போது இவருக்கு இருந்தது. ஆனால் இப்போது இவருக்கு எதிராக பல்வேறு புகார்கள் வாசிக்கப்பட்டு வருவதாலும், உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளதாலும் டெல்லி தலைமை தமிழ்நாடு தலைமையை மாற்ற முடிவு செய்துள்ளதாம்.

தலைமை மாற்றம்
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படக் கூடிய சூழல் கனிந்து வருகிறது என்கிறார்கள் கதர் கட்சியினர். தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, எம்.பி.க்கள் செல்லக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், கார்த்திசிதம்பரம், டாக்டர் ஜெயக்குமார், ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரசின் பொருளாளர் ரூபி மனோகரன் உள்பட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரூட்டுகளிலிலும் லாபிகளிலிலும் கோதாவில் இறங்கியுள்ளனர். லாபியுடன் கூடிய சூட்கேஸ் சகிதமும் சிலர் களத்தில் உள்ளனர்.

லாபிக்கள்
இதற்காக, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவை சிலர் அணுகியுள்ளனர். அதேபோல மல்லிகார்ஜுனகார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரையும் தங்களின் லாபிகள் மூலமும் சந்தித்துள்ளனர். மல்லிகார்ஜுன காக்கேயை சந்தித்த கார்த்தி சிதம்பரம், தலைவர் பதவியில் தன்னை நியமிப்பது தொடர்பாக பேசியிருக்கிறார். கார்கோவோ, ராகுல்ஜியை சந்தித்து பேசுங்கள். அவரது முடிவுதான் எனது முடிவும். தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் நான் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளாராம்.

ராகுல் காந்தி
இந்த நிலையில், ஜனவரி 3-ந்தேதி வரை ஓய்வில் இருக்கும் ராகுலை சந்திக்க முயற்சித்து வருகிறார் கார்த்தி. இதற்கிடையே, சோனியாவை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்த ப.சிதம்பரமும், தமிழக தலைவராக தனது மகனை நியமிக்க கோரிக்கை வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், கார்த்தியை நியமிக்க ராகுல் விரும்பவில்லை என கே.எஸ்.அழகிரி தரப்பினர் இன்னொரு பக்கம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆட்களுக்கும், கே.எஸ் அழகிரி ஆட்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. கே.எஸ் அழகிரியை மறித்து ரூபி மனோகரன் ஆட்கள் சில கேள்விகளை கேட்க முயன்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ஆயுட்காலம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இது பற்றி விசாரிப்பதற்காக நடந்த விவாதத்தில்தான் இந்த மோதல் ஏற்பட்டது. இதில் மண்டை உடைக்கும் அளவிற்கு சண்டை முற்றியது. காங்கிரஸ் வட்டார தகவல்களின்படி கே.எஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

மாற்றம்
இந்த நிலையில்தான் கார்த்தி சிதம்பரம் தலைவர் பதவிக்கு தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் செல்வப்பெருந்தகை இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். ரூபி மனோகரனும் தலைவராக தீவிரமாக முயன்று வருகிறார். ஜோதிமணி பெயரும் தலைவருக்கான ரேஸில் அடிபட்டது. இந்த ரேஸில் மிக முக்கியமானவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான மாணிக்கம் தாக்கூர் எம்.பி. இவர்களில் யாருக்கும் தலைவர் பதவி கிடைக்கும்.. கார்த்தி சிதம்பரம் எதிர்பார்த்தது போல அவர் தலைவர் ஆவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications