Tik Tok: மீண்டும் வரும் டிக்டாக்? 5 ஆண்டுக்கு பின் இந்தியாவில் இயங்கும் இணையதளம்! பின்னணி
டெல்லி: நம் நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்த செல்போன் செயலிகளில் ஒன்று தான் டிக் டாக். இந்தியா - சீனா எல்லை மோதல் காரணமாக இந்த டிக்டாக் கடந்த 2020ம் ஆண்டில் நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்பெற்று வரும் நிலையில் டிக்டாக் இணையதளம் மீண்டும் நம் நாட்டில் செயல்பாட்டுக்கு வர தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் நம் நாட்டு படை வீரர்களும், சீன படை வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த மோதலில் நம் நாட்டின் ராணுவ வீரர்கள் பலியாகினர். அதேபோல் சீனாவின் ராணுவ வீரர்களும் இறந்தனர்.

இந்த மோதலை தொடர்ந்து நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு மோசமானது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 2020 ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் டிக்டாக்.
டிக்டாக் செயலிக்கு தடை ஏன்?
இந்த டிக்டாக் செயலி என்பது சீனாவின் ByteDance என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. நம் நாட்டின் பாதுகாப்பு, டேட்டா திருட்டு உள்ளிட்டவற்றை தடுப்பதன் ஒரு பகுதியாக இந்த செயலி தடை விதிக்கப்பட்டது. இது சீன நிறுவனத்துக்கு பெரும் அடியாக மாறியது.
நம் நாட்டில் பல கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் ஒரே நாள் இரவில் டிக்டாக் செயலி மொத்தமாக நம் நாட்டின் மார்க்கெட்டை இழந்தது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களின் பிளேஸ்டோரில் இருந்தும் டிக்டாக் செயலி அதிரடியாக நீக்கப்பட்டது. இதனால் நம் நாட்டு மக்கள் பிற செயலிகளை பயன்படுத்த தொடங்கினர்.
மீண்டும் வந்த டிக்டாக் இணையதளம்
இந்நிலையில் தான் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிக்டாக் இணையதளம் நம் நாட்டில் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.
டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது முதல் இந்த இணையதளம் நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் தற்போது அது மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது. இது டிக்டாக் செயலி மீண்டும் நம் நாட்டில் அறிமுகம் ஆகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
சீனா அமைச்சர் வருகை
இதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் சமீபத்தில் இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்பெற தொடங்கி உள்ளது. அமெரிக்கா நமக்கும், சீனாவுக்கும் வரிகளை விதித்துள்ளது. நம் நாட்டுக்கு விதிக்கப்பட்ட வரியை சீனா எதிர்க்க தொடங்கி உள்ளது.
அதோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் நரேந்திர மோடியை ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
சீனா செல்லும் மோடி
அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியும் இந்த மாத இறுதியில் சீனாவுக்கு செல்கிறார். கல்வான் தாக்குதலுக்கு பிறகு முதல் முதலாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். சீனாவில் உள்ள தியான்ஜின் எனும் நகரில் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த வேளையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி, இந்தியா - சீனா உறவு பலமாகும் நிலையில் தான் டிக்டாக் செயலி மீண்டும் நம் நாட்டுக்குள் ‛என்ட்ரி' ஆகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை டிக்டாக் செயலி நம் நாட்டுக்குள் மீண்டும் வருவது பற்றி மத்திய அரசு அல்லது சீனா தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
மீண்டும் வருகிறதா?
அதேபோல் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் டிக்டாக் செயலி தற்போதும் இல்லை. ஆனால் ‛டிக்டாக்' செயலிக்கான இணையதளம் நம் நாட்டில் இயங்க தொடங்கி உள்ளதால் ‛டிக்டாக்' செயலி மீண்டும் வருகிறது என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications