அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65 ஆக அதிகரிப்பு? தீயாய் பரவும் தகவல்.. மத்திய அரசு தந்த விளக்கம்
டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிஐபி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் அரசு பணியாளர்களின் ஓய்வு வயது முதலில் 58 ஆக இருந்தது. அதன்பிறகு இந்த வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசின் பெரும்பாலான அலுவலகங்கள், நிறுவனங்களில் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. சில துறைகளில் குறிப்பிட்ட பதவிகளுக்கு 60 எனும் ஓய்வு வயது விதிவிலக்காக உள்ளது.

அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஓய்வு வயது வெவ்வேறாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அதேவேளையில் ஆந்திராவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 என்று உள்ளது. இப்படியான சூழலில் தான் இன்று முக்கிய தகவல்கள் வெளியாகின.
அதாவது பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகின. இது பொதுத்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பியாக அமைந்தது. அதேவேளையில் இளைஞர்களின் தலையில் இடியை இறக்கியது.
ஏனென்றால் ஓய்வு வயது அதிகரிக்கும்போது இளைஞர்களால் அரசு வேலையை எளிதில் பெற முடியாது. இதனால் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில் தான் ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கும் விவகாரம் தொடர்பாக இதற்கு மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிஐபி உண்மை சரிபார்ப்பு (PIB Fact Check or Press Information Bureau Fact Check) தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛அரசு பணியாளர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரிக்கும் கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக சில ஆர்ட்டிக்கிள்கள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசு இப்படியான எந்த முடிவையும் எடுக்கவில்லை'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆகஅதிகரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications