அடங்காத மசூத் அசார்.. இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஷ் இ முகமது பெரிய சதி.. பாகிஸ்தான் நன்கொடை வசூலிப்பு
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பை தொடர்ந்து இந்தியா மீது புதிதாக இன்னொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு அதற்காக பணம் வசூலித்த தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் வெடிப்பு நடந்தது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தான். இதில் உமர் இறந்தான். இது பயங்கரவாத தாக்குதல் என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இந்த கார் வெடிப்பு தொடர்பாக பயங்கரவாத உமர் பணியாற்றிய ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்த டாக்டர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை 6க்கும் அதிகமான டாக்டர்கள் உள்பட மொத்தம் 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு நன்கொடை பெற்றுள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. இதுபற்றி உளவுத்துறை சார்பில், ‛‛ டெல்லி செங்கோட்டை கார்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் டாக்டர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாத பெண்கள் பிரிவை உருவாக்கியுள்ளது. இதற்கு மசூத் அசாரின் சகோதரி சதியா தலைவராக செயல்பட்டு வருகிறார். நம் நாட்டுக்கான பெண்கள் பிரிவின் தலைவராக டாக்டர் ஷாகின் சயீத் செயல்பட்டுள்ளா். இவரை 'மேடம் சர்ஜன்' என்று அழைத்துள்ளனர். இவர் இந்தியா மீதான தாக்குதலுக்கு நிதி வழங்கும் பொறுப்பாளராக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியா மீதான தாக்குதல் என்பது ஃபிடாயின் அல்லது தற்கொலை படை தாக்குதல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பாகிஸ்தானிலிருந்து திரட்டியுள்ளனர். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.20,000 (இந்திய மதிப்பில் ரூ.6,400) திரட்டி உள்ளது தெரியவந்துள்ளது'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications