ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரம்-பொறியாளர் ரஷீத் எம்பிக்கு ஜாமீன்! பொறி கலங்கும் உமர் அப்துல்லா- ஏன்?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷீத் எம்பிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி இருக்கிறது. லோக்சபா தேர்தலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை சுயேட்சையாகப் போட்டியிட்டு தோற்கடித்தவர்தான் பொறியாளர் ரஷீத்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் நிர்வாகிகளும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதரர் ஷோபோர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்துக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷீத் எம்பிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் பொறியாளர் ரஷீத். 2008, 2014 ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர். 2024 லோக்சபா தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை தோற்கடித்தார். சிறையில் இருந்து பரோலில் வந்து லோக்சபா எம்பியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் ரஷீத்.
தற்போது ரஷீத் எம்பிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. அக்டோபர் 2-ந் தேதி வரை ரஷீத் எம்பிக்கு ஜாமீன் வழங்கிய பாட்டியாலா நீதிமன்றம், அக்டோபர் 3-ந் தேதி நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.
பொறியாளர் ரஷீத்துக்கு ஜாமீன் வழங்கி தேர்தல் பிரசாரத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அவரால் தோற்கடிக்கப்பட்ட உமர் அப்துல்லா உள்ளிட்டோருக்கு பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது. பொறியாளர் ரஷீத் தேர்தல் பிரசாரத்தில் என்ன பேசுவார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. பொறியாளர் ரஷீத்தின் Awami Ittehad Party கட்சியும் தேர்தல் களத்தில் களம் காண்கிறது.












Click it and Unblock the Notifications