அயோத்தி ராமர் கோயிலுக்குள் தொழுகை நடத்த முயன்ற இஸ்லாமியர்! பிடித்து சென்ற போலீசார்.. ஒரே பரபரப்பு
டெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர், திடீரென தொழுகை நடத்த முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் அவர் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அயோத்தி ராம கோயிலுக்குள் சென்று சீதா ரசோய் பகுதியில் தொழுகை நடத்த முயற்சித்தது ஏன் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி கும்பாபிஷேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தினத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தர பிரதேச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

அயோத்தி கோயிலில் இஸ்லாமியர் தொழுகை
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்குள் புகுந்த இஸ்லாமியர் ஒருவர் தொழுகை நடத்த முயன்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழுகை நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்திய போது கோஷமும் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
ராமர் கோயிலுக்குள் தொழுகை நடத்த முயன்ற நபர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த அகமத் ஷேக் என்பதும் 55 வயதான இவர், உச்ச கட்ட பாதுகாப்பு நிறைந்த அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் நேற்று வந்துள்ளார். கோயிலுக்குள் சென்ற இவர், சீதா ரசோய் பகுதியில் தொழுகை நடத்த தயாரானதாக சொல்லப்படுகிறது.
போலீசார் தீவிர விசாரணை
இதைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். உடனடியாக அங்கிருந்து கோயில் பாதுகாவலர்களால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகமத் ஷேக், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். காவல் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
தொழுகை நடத்துவதை தடுத்து நிறுத்திய போது அவர் கோஷமும் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. எனினும், இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. அயோத்தியில் பதற்ற சூழலை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து போலீசார் கூறுகையில், "விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்.
அயோத்திக்கு ஏன் வந்தார்?
அயோத்திக்கு அவர் ஏன் வந்தார்? அவர் மட்டுமே தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரேனும் வந்து இருக்கிறார்களா?" என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அகமத்தின் உடமையை சோதனை செய்த போது, முந்திரி மற்றும் திராட்சை போன்ற பொருள்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்கள். ஆஜ்மீருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக அந்த நபர் போலீசாரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமர் கோயிலில் பாதுகாப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அயோத்தி கோயிலுக்குள் இஸ்லாமியர் ஒருவர் வந்து தொழுகை நடத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் பற்றி மாவட்ட நிர்வாகமோ, கோயில் அறக்கட்டளை தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மகர சங்கராந்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் அயோத்தியில் களைகட்டிக் வருகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் மகர சங்கராந்திக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கூறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications