டெல்லி கலவர வழக்கில் பாரபட்சம் காட்டாதீங்க.. டெல்லி போலீஸுக்கு.. ரிபைரோ அதிரடி கடிதம்
டெல்லி: டெல்லி கலவர விசாரணையில் பாரபட்சமின்றி காவல்துறை செயல்பட வேண்டும். குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது வருத்தம் தருகிறது என்று முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் ஜூலியோ ரிபைரோ. தற்போது 91 வயதாகும் ரிபைரோ ஒரு காலத்தில் இந்தியாவைக் கலக்கிய காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். பஞ்சாப் காவல்துறை டிஜிபியாக பணியாற்றிய காலகட்டத்தில் அங்கு தீவிரவாதம் தலைவிரித்தாடியது. அப்போது துப்பாக்கிக்குத் துப்பாக்கி என்று அதிரடியாக செயல்பட்டு காலிஸ்தான் அமைப்பினரை ஒடுக்கியவர் ரிபைரோ.
காவல்துறையில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள இவர் ஓய்வுக்குப் பின்னர் ருமேனியா நாட்டின் தூதராகவும் இருந்தார். தற்போது மும்பையில் வசித்து வரும் ரிபைரோ டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவாஸ்தவாவிற்கு எழுதியுள்ளதாக வெளியாகியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் டெல்லி வன்முறை தொடர்பான விசாரணை குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் ரிபைரோ.

அதிர வைக்கும் கடிதம்
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புக்குரிய ஸ்ரீவாஸ்தவா, "கனத்த இதயத்துடன் இந்தக் கடித்தை உங்களுக்கு எழுதுகிறேன். உண்மையான தேசபக்தியாளராக, இந்திய காவல்துறையின் பெருமைக்குரிய முன்னாள் உறுப்பினராக இந்த கடிதத்தின் மூலம் நான் உங்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள 753 முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பான விசாரணையை நியாயமான முறையில் நடத்துவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அமைதியான போராட்டம்
டெல்லி காவல்துறை, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் வட கிழக்கு டெல்லியில் கலவரம் மூளும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தியவர்கள், துவேஷமாக பேசியவர்கள், தூண்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அரசியல் சாராத, என்னைப் போன்ற நடுநிலையாளர்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது.

கபில் மிஸ்ராவை விட்டது ஏன்
கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா போன்றோர் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை, நீதிமன்றங்களில் ஏன் இவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதேசமயம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இஸ்லாமிய பெண்கள் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல உண்மையான தேசபக்தியாளர்களான பேராசிரியர் அபூர்வானந்த், ஹர்ஷ் மந்தர் ஆகியோர் போலீஸாரால் கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இன்னொரு கவலை அளிக்கும் விஷயமாகும்.

சட்டத்தை காக்க வேண்டும்
காவல்துறை பணியில் உள்ளவர்கள், இந்திய காவல்துறை பணியிலிருந்து மக்களைக் காக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அரசியல் சாசனச் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். சட்டங்களைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும். மதம், ஜாதி, அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது. உங்களது தலைமையில் உள்ள டெல்லி காவல்துறையில் இடம் பெற்றுள்ள அனைவருமே, தாங்கள் பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கேற்ப செயல்படுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது". இவ்வறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரிபைரோ.

விசாரிக்கிறோம் - காவல்துறை
இந்தக் கடிதம் குறித்து டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஈஷ் சிங்கால் கூறுகையில், ஜூலியோ ரிபைரோ பெயரில் ஒரு இமெயில் கடிதம் வந்துள்ளது உண்மைதான். அதில் அவர் வட கிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக சில கவலைகளைத் தெரிவித்துள்ளார். ரிபைரோ மதிப்புக்குரிய காவல்துறை அதிகாரி. அவர் சில காலமாக டெல்லி காவல்துறையுடன் எந்தத் தொடர்பிலும் இருக்கவில்லை. எனவே இந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார் சிங்கால்.

டெல்லியில் நடந்த கலவரம்
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இஸ்லாமிய சமூகத்தினர் மிகப் பெரிய அமைதிப் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் திடீரென பிப்ரவரி 23ம் தேதி கலவரம் மூண்டது. சிலர் கும்பலாக வந்து தாக்குதல் நடத்தினர். இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் மிகப் பெரிய அளவில் குறி வைத்துத் தாக்கப்பட்டன. 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தை அடக்குவதில் காவல்துறை சரிவர செயல்படவில்லை என்று அப்போது பலத்த குற்றச்சாட்டு எழுந்தது. கலவரக்காரர்களை போலீஸார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

ஆயிரக்கணக்கில் கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கலவரத்தைத் தூண்டியதாக சிலர் மீது குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் ஆதாரங்களோடு பலரும் தகவல்களைப் பகிர்ந்தனர். ஆனால் அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டாகும். 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்குப் பிறகு டெல்லி கண்ட மிக மோசமான இனவெறித் தாக்குதலாக இது அமைந்து டெல்லிக்கு பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications