"நான் இங்கிலாந்து ராணி இல்ல, என் வலியையும் புரிஞ்சுங்கோங்க".. மீண்டும் சர்ச்சையில் எம்பி கங்கனா
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், மணாலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்களது வாழ்வாதாரத்தையும், உறவினர்களையும் இழந்து தவிக்கும் அப்பகுதி மக்களை நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் நேரில் சந்தித்தார். ஏற்கனவே, தாமதமாக சந்திக்க வந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். வெளியே போ கங்கனா என்று பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த வீடியோ வெளியாகியிருந்தது. அப்போது, பொதுமக்களிடம் என் உணவகத்தில் 50 ரூபாய் மட்டும் தான் வருமானம் வருகிறது. நானும் மனுஷிதான், என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களிடம் கூறியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
பிரிக்க முடியாதது கங்கனா ரனாவத்தும், சர்ச்சையும் என்பது போல சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் கங்கனா ரனாவாத். தொடர்ந்து, தனது கருத்துகளால் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் கோபத்துக்குள்ளாகி வருகிறார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தையும், குடும்பத்தையும், உறவினர்களையும் இழந்தனர்.

இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று சென்று மக்களை நேரில் சந்தித்தார். ஏற்கனவே, பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக சந்திக்க வந்ததால் கங்கனா மீது பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்த கங்கனாவுக்கு, "வெளியே போ கங்கனா!" என்ற கோஷம் எழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் கோஷம் எழுப்பிய நிலையில், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது எம்பி கங்கனா ரனாவத் பொதுமக்களிடம் பேசினார். நானும் இங்குதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது வீடு, நிலம் இங்குதான் இருக்கின்றன. நானும் பல்வேறு நஷ்டத்தை சந்தித்துள்ளேன்.
நான் வைத்திருக்கும் உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் தான் வருமானம் வந்தது. ஆனால், 15 லட்சம் ரூபாயை உணவகத்தில் வேலை செய்பவர்களுக்கு நான் சம்பளமாக கொடுக்க வேண்டும். எனது வலியையும் புரிந்து கொள்ள வேண்டும். நானும் ஒரு மனுஷிதான். தயவுசெய்து என்னை இங்கிலாந்து ராணி போல் உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக நினைத்து தாக்காதீர்கள். நானும் இங்குதான் என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான உயிர்களை, வாழ்வாதாரங்களை, உறவுகளை இழந்து தவிக்கும் மக்களிடம், உணவகத்தில் இருந்து 50 ரூபாய் வருமானம் வந்தது என்று கங்கனா ரனாவத் கூறியது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications