அதெப்படி தமிழகத்துக்கு தினம் 5000 கனஅடி திறக்க முடியும்? காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா மனு
டெல்லி: ஆகஸ்ட் 29ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் உத்தரவிடப்பட்ட நிலையில் அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடகா சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி பிரச்சனையை தீர்க்கும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் என்பது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது போல் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா நீர் திறந்து விடுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தான் போதிய மழை இல்லை எனக்கூறி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த மாதம் இறுதியில் டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் காரசாரமான விவாதம் நடந்தது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் போதிய அளவு மழை இல்லாத காரணத்தை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் உத்தரவிட வேண்டும் என கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் 29 ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. இது ஒருபுறம் இருக்க தான் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் ‛‛ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை என்பது வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் தற்போது கர்நாடகா அரசு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 15 நாட்கள் தமிழகத்துக்கு நாள்தோறும் 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை மறுாய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications