"எல்லாம் பணத்திற்காக"! உச்சநீதிமன்றத்தில் வீடியோவில் ஆஜரான கரூர் பிரித்திக்கின் தாய் ஷர்மிளா
டெல்லி: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 11 வயது சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர் செல்வம், சிபிஐ கோரி மனு தாக்கல் செய்த விவகாரத்தில் "அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என பிரித்திக்கின் தாய் ஷர்மிளா, உச்சநீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 இறந்தவர்களில் 11 வயது பிரித்திக்கும் ஒருவர். இவரது தந்தை பன்னீர் செல்வம், தாய் ஷர்மிளா. இந்த நிலையில் தவெக சார்பில் எஸ்ஐடி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் பன்னீர் செல்வமும் தனது மகனுக்காக நீதி கேட்டு சிபிஐ விசாரணைக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் "இத்தனை நாளாக ஏன் வழக்கு தொடரவில்லை" என கேட்டதற்கு, பன்னீர் செல்வம், "மகனின் இறுதி சடங்கில் இருந்ததால் என்னால் மனு தாக்கல் செய்ய முடிவில்லை. அதனால் இப்போது தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.
இந்த நிலையில் இவரை போல் 5 -க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் புது ட்விஸ்ட்டாக சிறுவனின் தாய் பேட்டி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தாய் ஷர்மிளா கூறுகையில், "பிரித்திக் எனது மகன்தான். பன்னீர் செல்வம் எனது கணவர்தான். ஆனால் அவர் வழக்கு போட்டது குறித்து எனக்கு தெரியாது. பணத்திற்காக அவர் வழக்கு போட்டுள்ளார். அவர் எனது மகனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை.
மகனின் இறுதி சடங்கிற்குக் கூட வரவில்லை. அவன் எத்தனையாவது வகுப்பு படித்து வந்தான், அவனுடைய வயது என்ன என்பது கூட அவருக்கு தெரியாது. எங்களுக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே என்னை விட்டு அவர் பிரிந்துவிட்டார். அவர் என்னை விட்டு போய் 8 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார், இப்போது ஏன் வந்திருக்கிறார் என தெரியவில்லை. என் மகன் உயிருடன் இருந்த வரை நானும், என் அம்மா, என் தம்பியும்தான் பார்த்துக் கொண்டோம். எனவே மகனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பையன் இறந்ததும் சுடுகாட்டுக்கு வந்து பார்த்து விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து தவெக கட்சியில் இருந்து என்னிடம் பேசினார்கள். அவர்கள், "உங்கள் கணவர் தனது பெயருக்கு செக் போட சொல்லி தொல்லை கொடுக்கிறார். எனவே பையன் யாரிடம் இருந்தார் என்பதற்கான அத்தாட்சி வேண்டும்" என கேட்டுள்ளனர்.
மகனின் வயதை கூட அவர் தவறாகவே மனுவில் போட்டுள்ளார். பணத்திற்காகவே அவர் இப்படி செய்து வருகிறார்" என ஷர்மிளா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில் பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மனைவி பேட்டியால் இன்று அவருக்கு எதிரான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு தாய் ஷர்மிளா, வீடியோ மூலம் ஆஜராகினார். அப்போது தனது கணவர் தாக்கல் செய்திருந்த மனு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தனது மகன் குழந்தையாக இருந்த போதே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications