அதிரடி காட்டிய ED! கைது நடவடிக்கையை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தில் சந்திரசேகர ராவ் மகள் முறையீடு
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.

இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன. தற்போது வரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கைதாகியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரிடம் கணக்காளராக வேலை பார்த்ததாக கூறப்படும் புஜ்ஜிபாபு, "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிஷோடியா ஆகியோருக்கு இடையே கவிதாவுக்கு அரசியல் புரிந்துணர்வு இருந்தது" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார். எனவே அமலாக்கத்துறையின் விசாரணை வெளிச்சம் கவிதா மீது திரும்பியது.
தொடர் சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், ஒரு சில சம்மன்களுக்கு மட்டும் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். ஆனால் இவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி, கடந்த 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி அமலாக்கத்துறையினர், மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அடுக்கடுக்கான புகார்களை அடுக்கியது.
அமலாக்கத்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என பிஆர்எஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications