கீழடி அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம்! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: கீழடி ஆய்வு அறிக்கை தாக்கல் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அமர்நாத் தாக்கல் செய்திருந்த கீழடி ஆய்வறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கேட்டிருந்த நிலையில் இடமாற்றம் நடந்துள்ளது.
அமர்நாத், தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தார். கீழடி ஆய்வறிக்கைகளை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இந்த அறிக்கையை திருத்தி எழுத உத்தரவு மட்டும் பிறப்பித்திருந்தது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரது குழு ஆய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து அமர்நாத் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்திக்கு மாற்றப்பட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. தற்போது அங்கு 10ஆம் கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகளை இந்திய தொல்லியல் துறையிடம் அமர்நாத் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை இந்த அறிக்கைகளை வெளியிடவில்லை. ஆனால் தொழில்நுட்ப விவரங்களுடன் அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ய அமர்நாத்துக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியிருந்தது.
அந்த கடிதத்தில் கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு வரையிலான ஆய்வுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும் சில வரைபடங்கள் எல்லாம் போதிய தெளிவில்லாமல் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்திய தொல்லியல் துறைக்கு, அமர்நாத் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது. தொன்மை அறிவியல் முறைப்படித்தான் ஆய்வு செய்யப்பட்டது. கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கிமு. 8ஆம் நூற்றாண்டு வரை ஆய்வு செய்யப்பட்டே அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருத்தம் தேவையில்லை. அறிக்கையை தாக்கல் செய்து இரண்டரை ஆண்டுகள் கழித்து கேள்வி எழுப்பப்படுகிறது என அமர்நாத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கீழடி கூறும் தமிழின் தொன்மையை பாஜக அழிக்க பார்ப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த நிலையில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மேற்கோள் காட்டிய முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக் கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications