கெஜ்ரிவால் டூ சிசோடியா வரை.. 13 தொகுதியில் ஆம்ஆத்மிக்கு ஆப்பு வைத்த காங்கிரஸ்.. முழு டேட்டா
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவிடம், ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட முக்கிய ஆம்ஆத்மி தலைவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் தான் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 13 பேரின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியை தழுவி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. நேற்று தேர்தல் முடிவு வெளியானது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

ஆம்ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் டெல்லியில் 10 ஆண்டு தொடர்ந்து நடந்த ஆம்ஆத்மி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது. வழக்கம்போல் 2015, 2020ம் சட்டசபை தேர்தலை போல் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன. ஆனால் டெல்லி தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. இதுதான் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. அதோடு ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் எமனாக மாறி உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 13 தொகுதிகளில் ஆம்ஆத்மி வேட்பாளர்களின் வெற்றியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது.
இதன் மூலம் தான் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாஜக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர். இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் இந்த 13 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுகளை ஆம்ஆத்மி தலைவர்கள் வாங்கி இருந்தால் அவர்களிடம் பாஜக வேட்பாளர்கள் தோற்று இருப்பார்கள். அந்த 13 தொகுதிகளின் நிலவரம் வருமாறு:
அரவிந்த் கெஜ்ரிவால்: இதில் முதலில் புதுடெல்லி தொகுதியை கூறலாம். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா மொத்தம் 30,088 ஓட்டுகள் பெற்று வென்றார். அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 ஓட்டுகள் பெற்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது 4,089 ஓட்டுகள் தான். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சீத் 4,568 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி வைத்திருந்தால் இந்த ஓட்டுகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்து இருக்கும். அவரும் பாஜக வேட்பாளரிடம் தோற்று இருக்க மாட்டார்.
மணீஷ் சிசோடியா: இதில் 2வது தொகுதி என்பது ஜங்புரா. இந்த தொகுதியில் மாஜி துணை முதல்வரான ஆம்ஆத்மி வேட்பாளர் மணீஷ் சிசோடியா. இவர் பத்பர்கஞ்ச் தொகுதியில் 3 முறை வென்ற நிலையில் இந்த முறை தொகுதி மாறி ஜங்புராவில் களமிறங்கினார். இவர் பாஜகவின் தர்வீந்தர் சிங்கிடம் 675 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பர்ஹாத் சூரி 7,350 ஓட்டுகள் பெற்று மணீஷ் சிசோடியாவுக்கு ஆப்பு வைத்துள்ளார்.
3வது தொகுதி: அதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சரான ஆம்ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் பாஜகவின் ஷிகா ராய் என்பவரிடம் 3,188 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் கார்வித் சிங்வி 6,711 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
4வது தொகுதி: மேலும் மால்வியா நகரில் ஆம்ஆத்மி சார்பில் சோம்நாத் பாரதி பாஜகவின் சதீஷ் உபாத்யாயாவிடம் 2,131 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்தர் குமார் கோச்சார் 6,770 ஓட்டுகள் பெற்றார்.
5வது தொகுதி: அதேபோல் மங்கல்புரி தொகுதி எம்எல்ஏவாகவும், துணை சபாநாயகராக இருந்த ஆம்ஆத்மியின் ராக்கி பிர்லா இந்த முறை மடிபூர் தொகுதியில் களமிறங்கினார். இங்கு பாஜகவினர் கைலாஷ் கங்வால் அவரை 10,899 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜேபி பன்வார் 17,958 ஓட்டுகள் பெற்றார்.
6-7 வது தொகுதி: ராஜிந்தர் நகரில் பாஜக வேட்பாளர் உமாங்க் பஜாஜ் என்பவரிடம் ஆம்ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதாக் 1,231 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் வினித் யாதவ் 4,015 ஓட்டுகள் பெற்றிருந்தார். அதேபோல் சங்கம் விகார் தொகுதியின் ஆம்ஆத்மி எம்எல்ஏவாக இருந்த தினேஷ் மோகானியா, பாஜகவினர் சந்தன் சவுத்ரியிடம் 344 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ் சவுத்ரி 15,863 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
8 முதல் 13 வது தொகுதி: அதேபோல் டெல்லியில் உள்ள பட்லி, சதார்புர், மெஹ்ராலி, நாங்லோய், திமார்புர், திரிலோக்புரி உள்ளிட்ட 6 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் 2வது இடத்தில் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பாஜக வேட்பாளர் மற்றும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் ஆகியோருக்கு இடையேயான ஓட்டுகளை விட இந்த 6 தொகுதிகளிலும் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
இதன்மூலம் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து இருந்தால் ஒருவேளை பாஜகவை ஆட்சிக்கு வர விட முடியாமல் தடுத்து இருக்கலாம். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட தலைவர்களாவது தங்களின் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. ஆம்ஆத்மி தனித்து தான் போட்டியிடும் என்று அறிவித்து தேர்தலை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது கழற்றிவிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரால் தோல்வியடைந்ததோடு, ஆட்சியையும் பறிகொடுத்து உள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications