இந்தியாவில் HMPV தொற்று.. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் டெல்லி, கேரளா, ஆந்திரா! வழிகாட்டுதல்கள் என்ன
டெல்லி: கர்நாடக தலைநகர் பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க HMPV வைரஸ் பாதிப்பைத் தடுக்கவும் அதைக் கண்காணிக்கவும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்
சீனாவில் கடந்த சில நாட்களாகவே ஹெச்எம்பிவி தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் வேகமாக நிரம்பி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்கப் பெங்களூரில் எட்டு மாத குழந்தைக்கு இந்த ஹெச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இதற்குநநாம் அச்சப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். அதேநேரம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே இந்த வைரஸுக்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. இதில் ஒவ்வொரு மாநிலமும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்,
டெல்லி அரசு:
இதற்கிடையே HMPV மற்றும் மற்ற வைரஸ்கள் தொடர்பாகத் தயார்நிலை இருக்குமாறு டெல்லி சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. டெல்லி சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் வந்தனா பாக்கா நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நிலையில், அதைத் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
மருத்துவமனைகள், மருத்துவர்கள், உள்ளிட்டோர் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கை மற்றும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோரைத் தனிமைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால் அதை IHIP போர்ட்டல் மூலம் பதிவு செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் சரியான சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்களும் அதில் உள்ளன.
கேரள அமைச்சர்:
தென் மாநிலங்களான கேரளா, தெலுங்கானா கூட இது தொடர்பாக எச்சரித்துள்ளது. சீனாவில் ஹெச்எம்பிவி பரவி வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கேரளா மற்றும் தெலுங்கானா அரசுகள் கேட்டுக் கொண்டன.
இது தொடர்பாகக் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "மக்கள், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணியலாம். சீனாவில் என்ன நிலைமை என்பதைக் கண்காணித்து வருகிறோம். வேறு எதாவது இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
தெலுங்கனா அரசு சொல்வது என்ன:
தெலுங்கானாவின் பொதுச் சுகாதார இயக்குநர் பி ரவீந்தர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெலுங்கானாவில் இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேநேரம் நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றினால் போதும். HMPV குறித்து அச்சப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
ஆந்திர அரசு அறிவிப்பு:
அதேபோல இந்த HMPV வைரஸை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று ஆந்திராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் டாக்டர் கே பத்மாவதி கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், "ஆந்திரப் பிரதேச அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சில எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே போதும். ஹெச்எம்பிவி தொற்றில் இருந்து நாமும் நமது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications