இது புதுவகை மிரட்டல்.. ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்.. காலிஸ்தான் தீவிரவாதி பன்னூன் பகீர்
டெல்லி: காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். வரும் நவ. 1 முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்த அவர், இதனால் அந்தக் காலகட்டத்தில் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கனடாவிலும் அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இந்த குர்பத்வந்த் சிங் நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். காலிஸ்தான் பிரிவினைவாத கருத்துகளைப் பரப்பும் இவர், பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மிரட்டல்: காலிஸ்தானி பயங்கரவாதியான இவர் இப்போது புதிய மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது வரும் நவம்பர் 1 முதல் 19ம் தேதி வரை யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். சீக்கியர்கள் மீதான தாக்குதல் நடந்து 40 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த குறிப்பிட்ட தேதிகளில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா உட்பட பல்வேறு விமானங்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல் வரும் நிலையில், இந்த மிரட்டல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா உட்பட பல விமானங்களுக்குக் கடந்த சில நாட்களாக வரிசையாக மிரட்டல் வருகிறது. இதனால் அவசர அவசரமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், அனைத்து மிரட்டல்களுமே போலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் தொடர்பாக உடனடியாக மத்திய அரசு இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல ஏர் இந்தியா தரப்பிலும் இதுவரை எந்தவொரு கருத்தும் கூறப்படவில்லை.
முதல்முறை இல்லை: மேலும், அவர் இதுபோல மிரட்டல் விடுப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இதுபோல மிரட்டல் விடுத்தார்.
மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுவோம் என்றும் நவம்பர் 19ம் தேதி ஏர்போர்ட் மூடப்படும் என்றும் கூறினார். அது மட்டுமின்றி ஏர் இந்தியாவில் மக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதனால் அவர் மீது கிரிமினல் சதி, மதத்தின் அடிப்படையில் பகையை ஏற்படுத்துவது, உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றம்: அதேபோல கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தைத் தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். 2001 டிச. 13ம் தேதி நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்தார். மேலும், கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் போலீஸ் இயக்குனர் கவுரவ் யாதவ் ஆகியோரை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுபோல அவர் ஏகப்பட்ட மிரட்டல்களை விடுத்து இருந்தாலும், அவை வெற்று மிரட்டல்களாகவே இருந்துள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங்கை கடந்த 2020 ஜூலை மாதம் மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது. அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும், அவர் நடத்தி வரும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கடந்த 2019இல் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
