ருவாண்டாவில் பதுங்கிய லஷ்கர் தீவிரவாதி! சத்தமின்றி தூக்கிய என்ஐஏ! இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
டெல்லி: பெங்களூர் சிறையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி சல்மான் ரெஹ்மான் கான் ருவான்டா நாட்டில் பதுங்கி இருந்தார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இந்த பயங்கரவாதியை இப்போது இன்டர்போல் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.
நமது நாட்டில் பயங்கரவாத செயல்களைத் தடுப்பதில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. பல பயங்கரவாத நடவடிக்கைகளை என்ஐஏ அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

இதற்கிடையே இப்போது இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுவிட்டு குவான்டா நாட்டிற்குத் தப்பியோடிய லஷ்கர் பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்கள். ருவாண்டாவில் இருந்து அந்த பயங்கரவாதி என்ஐஏ அதிகாரிகளால் இன்று நாடு கடத்தப்பட்டார்.
சல்மான்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் சிறைகளில் இருந்த சல்மான், தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து விநியோகம் செய்ததிலும் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ருவான்டா நாட்டிற்குத் தப்பியோடிய நிலையில், அவரை தான் இப்போது என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் இந்தியா அழைத்து வருகிறார்கள்.
என்ன நடந்தது: அதாவது கடந்த 2018ம் ஆண்டு சல்மான் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலும் இல்லை. 2022ம் ஆண்டு வரை அவர் சிறையில் இருந்த நிலையில், அங்கு தான் டி நசீர் என்ற பயங்கரவாதியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதான நசீர் மூளைச்சலவை செய்து சல்மானை பயங்கரவாதியாக மாற்றியிருக்கிறார். பிறகு சல்மான் சிறைக்குள்ளேயே பயங்கரவாத நெட்வோர்க்கை உருவாக்கியுள்ளார்.
அதன் பிறகு வெளியே வந்த சல்மான் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. ஆயுதங்கள், வெடிமருந்துகளைப் பயங்கரவாதிகள் வாங்கவும் வினியோகிக்கவும் அவர் உதவியிருக்கிறார். அதேபோல பயங்கரவாதி நாசீர் ஒரு முறை நீதிமன்றத்திற்கு ஆஜராக போனபோது அவர் தப்பிச் செல்ல முயன்றார். அதற்கும் சல்மான் தான் முக்கியமாக உதவியுள்ளார். இதெல்லாம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்த நிலையில், சல்மான் இந்தியாவில் இருந்து தப்பியோடினார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
என்ஐஏ: இந்த பெங்களூர் சிறைச்சாலை பயங்கரவாத சதி வழக்கை முதலில் பெங்களூர் போலீசார் தான் விசாரித்து வந்தனர். அதன் பின்னரே இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சல்மான் மீது கடுமையான உபா, ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டம் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
என்ஐஏ வேண்டுகோளைத் தொடர்ந்து இன்டர்போல் சார்பில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ரெட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ரெட் நோட்டீஸின்படி நடவடிக்கை எடுத்த ருவாண்டா அதிகாரிகள், சல்மானைக் கைது செய்து, இந்திய ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ருவாண்டா தேசிய மத்திய படை, இன்டர்போல், என்ஐஏ அமைப்பின் தொடர் முயற்சியால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்ட: இந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், இன்டர்போல் அதிகாரிகளுடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் தப்பியோடிய 26 குற்றவாளிகள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த ரைஹான் என்பவர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இருந்தார். இது தவிரப் பல பயங்கரவாதிகளும் கூட நாடு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications