இப்போ பேசுங்க பார்ப்போம்! கார்கேவின் ‛மைக்கை’ ஆப் செய்ததால் பரபரப்பு! ராஜ்யசபாவில் வெளிநடப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேச எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மைக் திடீரென ‛ஆப்' செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு தொற்றி கொண்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. மணிப்பூர் வன்முறை, அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

ஆனால் ராஜ்யசபா, லோக்சபா என நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் அதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் தினமும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து இரு சபைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு சபைகளும் முடங்கிய நிலையில் நேற்றும், இன்றும் மீண்டும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறினர். இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் லோக்சபா மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு ராஜ்யசபா மதியம் 2 மணிக்கு கூடியது. இந்த வேளையில் பழங்குடியினர் சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே மணிப்பூர் பழங்குடியினர் பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் எனக்கூறினார். மேலும் மசோதா மீது அவர் கருத்து தெரிவிக்க முயன்றார்.
இந்த வேளையில் மல்லிகார்ஜூன கார்கேவின் மைக் ‛ஆப்' செய்யப்பட்டது. இதனால் அவரது பேச்சு என்பது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கேட்கவில்லை. இதற்கு எதிர்க்டக்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‛இந்தியா' எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளியேறினர்.
மேலும் மல்லிகார்ஜூன கார்கேவின் ‛மைக்' ஆப் செய்யப்பட்டதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஓபிரையன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மைக் ஆப் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‛இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்றம் இருண்ட அறையாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications