'நெவர்..' ஏற்றுக்கொள்ள முடியாது! தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காத நாடுகள் இதுதான்
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமண அங்கீகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தியாவில் நீண்ட காலமாக தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. உலகின் சில நாடுகள் தற்போதுவரை தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காமல் இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்களாகிய நாங்கள் திருமணம் செய்துக்கொள்ளும் போது அந்த திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் அனைவரும் சமம் என்கிற அரசியமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது. எனவே எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இடதுசாரிகள், முற்போது இயக்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கில் 4 தீர்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளும் உள்ளன என அவர் கூறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தினால் சட்டத்தை உருவாக்க முடியாது. அதேநேரத்தில், சட்டத்தின் சரத்துகளை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, சிறப்பு திருமண சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டுமா என நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கிறதா? என்று சக நாடுகள் உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன. இந்தியா போலவே பல்வேறு நாடுகளிலும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில் ஒரு சில நாடுகள் இந்த திருமணத்தை அங்கீகரித்தாலும், பல நாடுகள் இதை சட்டப்பூர்வமாக ஏற்கவில்லை. குறிப்பாக காபோன் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவு தவறானது என சட்டம் இருக்கிறது. இதற்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட உள்ளது.
அதேபோல நைஜீரியா, உகாண்டா நாடுகளில் முன்பு இருந்ததை விட தற்போது ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கென்யாவிலும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவு சட்டத்திற்கு புறம்பானது என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த 2019ம் அண்டு தீர்ப்பளித்திருந்தது. மேற்குறிப்பட்ட நாடுகள் எல்லாம் சிறை தண்டனை மற்றும் அபராதத்தோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் புருனே, ஈரான், மொரிட்டானியா, சவூதி அரேபியா, யேமன் மற்றும் நைஜீரியாவின் சில வட மாநிலங்களில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவுக்கு மரண தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கத்தார், சோமாலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகி நாடுகளிலும் இதற்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன.
சூடானில் கடந்த 2020ம் ஆண்டு வரை தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவுக்கு மரண தண்டனை இருந்தது. ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 33 நாடுகள் தன்பாலி ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கிறது. 34 நாடுகள் இவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications