டைம் குறிச்சாச்சு.. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! ஆதரிக்கும், எதிர்க்கட்சிகள் எவை?
டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்கும் நிலையில், இதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் எவை? எதிர்க்கட்சிகள் கட்சிகள் எவை? என்ற பட்டியலை பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேச வலியுறுத்தியும், மாநிலங்களவையில் முழு நாள் விவாதத்திற்கு அனுமதியளிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் கடந்த 2 வாரங்களாக இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர்.
50 உறுப்பினர்களின் ஆதரவு இருந்த காரணத்தால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, மணிஷ் திவாரி, கௌரவ் கோகோய், தீபக் பைஜ் ஆகியோர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்ற உள்ளார்கள்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி இதன் மீது உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உரைக்கு பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவு பாஜகவுக்கு இருந்தாலும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமரை பேச வைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒற்றை நோக்கம்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளித்து உள்ளன. அதாவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்து உள்ளன.
பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுக, ஆப்னா தளம், ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் மத்திய அரசுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கின்றன. அதேபோல் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளன.
மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளன. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி, அசதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக எந்த நிலைபாட்டையும் அறிவிக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் முடிந்த பிறகே எந்தெந்த கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்ற முழு விபரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications