மோடி சரணடைந்துவிட்டார்.. அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் எதிர்க்கட்சிகள் கோஷம்.. லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: மக்களவையின் பிற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று பிரதமர் மோடியுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வழியாக பேசினார்.

அப்போது இருநாடுகளின் வர்த்தக ஒப்பந்தம், வரி விவகாரங்கள் பற்றி இருவரும் ஆலோசித்தனர். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் ‛‛பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக அவரது கோரிக்கையை அமெரிக்கா ஏற்றது., அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா தற்போதுள்ள 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்கும்'' என்று கூறினார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அவர் (பிரதமர் மோடி) ஒப்புக்கொண்டார். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதேபோல் இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று டிரம்ப் கூறினார்.
ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றி இன்னும் விரிவான தகவல்கள் வரவில்லை. மத்திய அரசு மற்றும் அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் மோடி பணிந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 6வது நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கேள்வி நேரத்துடன் லோக்சபா தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த கோரிக்கை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் 12 மணிக்கு தொடங்கிய லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு தொடங்கிய லோக்சபா கூச்சல் குழப்பத்தால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளையில் ராஜ்யசபாவில் வழக்கம்போல் சபை நடவடிக்கைகள் தொடங்கி நடந்தது.












Click it and Unblock the Notifications