ராஜ்யசபாவில் அனல் தெறித்த வாதம்.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. லோக்சபா மீண்டும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். எதிர்க்கட்சிகள் அமளியால் இன்றும் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியை மையப்படுத்தி நடந்த வாதத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் இடையே வாதம் அனல் தெறித்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிக்கள் பேசி வருகின்றனர். 3 நாட்களாக விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச முடியாத மோடி
இந்நிலையில் தான் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு பேச இருந்தார். ஆனால், அவர் சபைக்கு வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் லோக்சபா தொடங்கியது. அப்போது சீன எல்லை விவகாரம், அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர்.
லோக்சபா ஒத்திவைப்பு
இதையடுத்து, லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு தொடங்கியபோதும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இன்று ஜனாதிபதி உரையின் மீதான நன்றி சொல்லும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச உள்ளார். பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு பேச உள்ளார்.
ராஜ்யசபாவில் கடும் வாதம்
கடந்த 3 நாட்களாக அமைதியாக நடந்து வந்த ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீன எல்லை விவகாரம், அமெரிக்கா - இந்தியா வர்த்தகம் மற்றும் லோக்சபாவில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை கண்டித்து கோஷமிட்டனர். இருப்பினும் ராஜ்யசபா தொடர்ந்து நடந்து வந்த நிலையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
அதாவது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‛‛லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது பற்றி விவாதிக்க வேண்டும்'' என்று கூறினார். அதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, ‛‛லோக்சபா விவகாரத்தை இங்கு பேச அனுமதிக்க முடியாது. சபை விதிகளுக்கு கட்டுப்பட்டு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
ஜேபி நட்டா -நிர்மலா சீதாராமன்
அதேபோல் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா அவை முன்னவருமான ஜேபி நட்டா, ‛‛ராகுல் காந்தி 20 நிமிடங்கள் பேச வேண்டும் என்று கூறினார். ஆனால் விதிமுறையை அவர் பின்பற்றவில்லை. நாடாளுமன்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் அவருக்கு பாடம் எடுக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இந்த சபையின் மூத்த உறுப்பினர்'' என்றார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்லிகார்ஜுன கார்கே, ‛‛நாங்கள் ஆளும் கட்சியினர் போல் அவதூறு பரப்புவதோ, தாக்குதல் நடத்துவதோ இல்லை'' என்று கூறினார். அப்போது எழுந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்து என்பதாலே தையல் தொழிலாளி வெட்டி கொல்லப்பட்டார். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஆசிரியரின் கைகள் வெட்டப்பட்டது. அவதூறு மற்றும் தாக்குதல் பற்றி காங்கிரஸ் பேசக்கூடாது'' என்றார்.
வெளிநடப்பு
அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ‛‛நீங்கள் நேரு, இந்திரா காந்தியை அவதூறு செய்கின்றனர்'' என்றார். இதற்கு ஆளும் கட்சி எம்பிக்களும், மத்திய அமைச்சர்களும் பதிலளிக்க முயன்றனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற ராஜ்யசபாவை விட்டு வெளிநடப்பு செய்தனர். இன்று மாலை பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜ்யசபாவில் மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications