லோக்சபா தேர்தல் 4-வது கட்டம்:ஓவைசி, அகிலேஷ் யாதவ், யூசுப் பதான், ஒய்எஸ் ஷர்மிளா..1717 பேர் போட்டி!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் 4-வது கட்ட வாக்குப் பதிவு மே 13-ந் தேதி நடைபெற உள்ளது. ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும் தெலுங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் 2024 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 13-ந் தேதி நடைபெற உள்ள 4-ம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
96 தொகுதிகளுக்கு மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1970 வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது.

தெலுங்கானாவில் அதிகபட்சமாக 17 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்பு மனுக்களும் அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 1103 வேட்பு மனுக்களும் மல்கஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்பு மனுக்களும் நல்கொண்டா மற்றும் போங்கிர் தொகுதியில் தலா 114 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. 4-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆகும்.
4-ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே கட்டமாக மே 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா (25), பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிஷா (4), தெலுங்கானா (17), உ.பி. (13), மேற்கு வங்கம் (8) தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
96 தொகுதிகள் விவரங்கள்:
ஆந்திரா: அரக்கு, ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, அமலாபுரம், ராஜமுந்திரி, நர்சாபுரம், எலுரு, மச்சிலிப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நரசராவ்பேட்டை, பாபட்லா, ஓங்கோல், நந்தியால், கர்னூல், நெல்லூர், திருப்பதி, ராஜம்பேட்டை, சித்தூர்
பீகார்: தர்பங்கா, உஜியார்பூர், சமஸ்திபூர், பெகுசராய், முங்கர்
ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர்
மத்தியப் பிரதேசம்: தேவாஸ், உஜ்ஜைன், மண்ட்சூர், ரத்லம், தார், இந்தூர், கர்கோன், கந்த்வா
மகாராஷ்டிரா: நந்தூர்பார், ஜல்கான், ராவர், ஜல்னா, அவுரங்காபாத், மாவல், புனே, ஷிரூர், அகமதுநகர், ஷிர்டி, பீட்
ஒடிஷா: கலஹாண்டி, நபரங்பூர், பெர்ஹாம்பூர், கோராபுட்
தெலுங்கானா: அடிலாபாத், பெத்தபள்ளி, கரீம்நகர், நிஜாமாபாத், ஜாஹிராபாத், மேடக், மல்கஜ்கிரி, செகந்திராபாத், ஹைதராபாத், செவெல்லா, மஹ்பூப்நகர், நல்கொண்டா, நாகர்கர்னூல், புவனகிரி, வாரங்கல், மஹ்பூபாபாத், கம்மம்
உத்தரப் பிரதேசம்: ஷாஜஹான்பூர், கெரி, தருஹாரா, சீதாபூர், ஹர்தோய், மிஸ்ரிக், உன்னாவ், ஃபரூகாபாத், எட்டாவா, கன்னோஜ், கான்பூர், அக்பர்பூர், பஹ்ரைச்
மேற்கு வங்கம்: பஹரம்பூர், கிருஷ்ணாநகர், ரனாகாட், பர்தமான் பூர்பா, பர்த்வான்-துர்காபூர், அசன்சோல், போல்பூர், பிர்பூம்
ஜார்கண்ட்: சிங்பூம், குந்தி, லோஹர்டகா, பலமாவ்
விஐபி வேட்பாளர்கள்: தெலுங்கானாவின் ஹைதராபாத்: மஜ்லிஸ் கட்சியின் ஓவைசி, பாஜகவின் மாதவி லதா, காங்கிரஸின் வலியுல்லா சமீர் மோதுகின்றனர். 1984-ம் ஆண்டு முதல் ஓவைசியின் கோட்டையாக இருந்து வருகிறது ஹைதராபாத். 2004, 2009, 2014, 2019 ஆகிய 5 தேர்தல்களில் வென்றவர் ஓவைசி. 1984 முதல் 1999-ம் ஆண்டு வரை ஹைதராபாத் தொகுதியில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி வென்று எம்பியாக இருந்தார்.
ஒய்எஸ் ஷர்மிளா, யூசுப் பதான்: தெலுங்கானாவின் கரீம்நகரில் பாஜக மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய் குமார் இத்தொகுதியில் களம் காண்கிறார். பீகாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஆந்திராவின் கடப்பாவில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, ஜார்கண்டின் குந்தியிலிருந்து முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா, மேற்கு வங்கத்தின் அசன்சோலில் இருந்து திரிணாமுல் வேட்பாளராக நடிகர் சத்ருகன் சின்ஹா, மே.வங்கத்தின் பஹரம்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் களம் காண்கின்றனர். உ.பி. கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் களம் காண்கிறார்.












Click it and Unblock the Notifications