அடடே பாஜக! முதல் கட்டமாக வெளியிட்ட 195 வேட்பாளர்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்! யார் அவர் தெரியுமா?
டெல்லி: பாஜக முதல் கட்டமாக அறிவித்த 195 வேட்பாளர்களில் ஒரே ஒரு இஸ்லாமியர் இடம் பெற்றுள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக அப்துல் சலாம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. எந்த ஒரு மாநிலத்திலும் பாஜகவுக்கு முஸ்லிம் எம்.எல்.ஏ. இல்லை. நாடாளுமன்றத்தில் பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா பதவி காலம் முடிவடைந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் எம்பிக்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்ற 'பெயரை' பெற்றது பாஜக.

பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தரப்படுவது என்பது அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டு பேசு பொருளாகிவிடுகிறது. அந்த வகையில் தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு பாஜக அறிவித்த 195 வேட்பாளர்களில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் இடம் பெற்றுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் தொகுதி பாஜக வேட்பாளராக அப்துல் சலாம் அறிவிக்கப்பட்டுள்ளார். மலப்புரம் தொகுதியில் 70% வாக்காளர்கள் முஸ்லிம்கள். 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் கல்வியாளர் அப்துல் சலாம். உயிரியல் அறிவியல் துறையில் 153 ஆராய்ச்சி கட்டுரைகளையும் 13 புத்தகங்களையும் எழுதியிருப்பவர் அப்துல் சலாம். கேரளாவின் திரூரைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை Calicut பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.
2021-ம் ஆண்டு கேரளா சட்டசபை தேர்தலில் திரூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் குருக்கோலி மொய்தீன் 82,314 வாக்குகள் அதாவது 48.21% வாக்குகள் பெற்றார். இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர் 75,100 வாக்குகளை (43.98%) பெற்றார். பாஜகவின் அப்துல் சலாம் வெறும் 9,097 வாக்குகள் அதாவது 5.33% வாக்குகளையே பெற்று படு தோல்வியை தழுவினர்.
தற்போது அப்துல் சலாம் களம் காணும் மலப்புரம் லோக்சபா தொகுதி முன்னர் மஞ்சேரி தொகுதியாக இருந்தது. அப்போது1957 முதல் 1999-ம் ஆண்டு வரை 12 முறை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது. ஒரே ஒரு முறை இடதுசாரி வேட்பாளர் வென்றார். மலப்புரம் தொகுதியாக உருமாறிய பின்னர் 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை முஸ்லிம் லீக் கட்சிதான் வென்றுள்ளது.
2021-ம் ஆண்டு மலப்புரம் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் 48.96% வாக்குகளையும் சிபிஎம் வேட்பாளர் 38.53% வாக்குகளையும் பெற்றார். பாஜகவுக்கு 6.27% வாக்குகள் கிடைத்டது. இந்த முறை கல்வியாளர் அப்துல் சலாம் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications