கவனீத்தீர்களா.. லோக்சபா தேர்தலை மோடி VS ராகுல் காந்தி என மாற்றும் காங்கிரஸ்! அங்குதான் சிக்கலே
டெல்லி: லோக்சபா தேர்தல் களத்தில் பிரதமர் மோடியை போல தம்மை பிரதமர் வேட்பாளராக தமக்கு தாமே முன்னிறுத்துகிற வியூகத்துடன் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி களமாடுகிறார். ஆனால் களத்தில் காங்கிரஸ் முழுமையாக கோர்க்காமல் ராகுல் காந்தியை கை கழுவிக் கொண்டே இருப்பதால் பாஜக இயல்பாகவே அடித்து ஆடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நமது நாட்டின் லோக்சபா தேர்தல் என்பது மோடி vs ராகுல் என்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மொடி நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவரே பாஜக அணியின் பிரதமர் வேட்பாளர். ஆனால் ராகுல் காந்தி அப்படி முன்மொழியப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ள "இந்தியா" கூட்டணியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும் இல்லை. ஆனால் இந்த தேசம் மோடி -ராகுல் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராகுல் பிரசாரமும் எதிர்வினையும்: பாஜகவைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் தங்களுக்கு 100 வாக்குகளை கூடுதலாக அள்ளித் தரும் என்கிற மிதமிஞ்சிய நம்பிக்கையில் உள்ளனர். 2014-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் ராகுல் காந்தி ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பான பிரதமர் மோடியை விமர்சிக்க செளகிதார் சோர் ஹை- காவல்காரன் ஒரு திருடன் என்றார் ராகுல் காந்தி. ஆனால் பிரதமர் மோடியும் பாஜகவும் செளகிதார் எனும் காவல்காரர்களை இழிவுபடுத்திவிட்டார் ராகுல் காந்தி என பிளேட்டைத் திருப்பிப் போட்டது. அத்துடன் தங்களது பெயர்களுக்கு பின்னர் செளகிதார் என சேர்த்துக் கொண்டனர். செளகிதார் ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கினர். ராகுல் காந்தியின் செளகிதார் சோர் ஹை- பாஜகவுக்குதான் வெற்றியைக் கொடுத்தது.
இடஒதுக்கீடு- பாஜக- காங்கிரஸ்-ராகுல்: உதாரணமாக இடஒதுக்கீடு விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். இடஒதுக்கீட்டுக்கு எதிரானதுதான் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம். 1990களில் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் வட இந்தியாவில் செய்த கலவரங்கள் நாடறிந்த ஒன்றுதான்.
பணக்காரர்கள் செல்வம் பங்கீடு: இந்தியாவில் மோடியின் நண்பர்கள்- பணக்காரர்கள்தான் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கிறார்கள்- இத்தகையவர்களின் செல்வங்களை பங்கீடு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி பேசப் போக காங்கிரஸ் தலைவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது. கப்சிப்பென அமைதியாகிவிட்டனர். ஆனால் பாஜகவும் பிரதமர் மோடி உள்ளிட்டோரும், அய்யய்யோ உங்க சொத்தை எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கைப்பற்றிவிடும்; அதுவும் உங்க சொத்தை எல்லாம் முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும்; ஏற்கனவே உங்க இடஒதுக்கீட்டை பறித்துதான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ். இப்போது செல்வத்தையும் கொடுக்கப் போகிறது என கோரஸாக கோர்த்துவிட இங்கேயும் ராகுல் காந்திக்குப் பின்னடைவுதான்.
ராகுலின் வியூகமும் பாஜகவின் பதிலடியும்: ஆனால் களத்தை உற்றுப் பார்ப்பவர்களுக்குதான் ரேஸில் முந்துவது ராகுலா? மோடியா? என தெரியும். சாமானியர்களுக்கு ராகுல் vs மோடி என்றுதான் தெரியும். ஒருவேளை இந்த முன்னிறுத்துதலைத்தான் ராகுல் காந்தி விரும்புகிறாரோ என்னவோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. இதனை பாஜகவும் பிரதமர் மோடியும் நன்றாகவே புரிந்து கொண்டு பந்தை ராகுல் காந்தி என்ற தனிநபர் பக்கம் திருப்பாமல், ஒட்டுமொத்த காங்கிரஸ் பக்கம் அழுத்தமாக வீசுகின்றனர். இந்த பந்தை எதிர்கொள்ள ராகுல் மட்டுமே தனிமரமாக நிற்க காங்கிரஸ் கை கோர்க்காமல் ஒதுங்கி நிற்க இயல்பாகவே பாஜகவின் பந்துகள் பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கும் ஓடிவிடுகிறது! ராகுல் காந்தி பாஜக பக்கம் செலுத்தும் கவனத்தை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் ஆழமாக செலுத்த வேண்டிய காலமும் இது எனவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications