"ஓவர் பேரம்" உடம்புக்கு ஆகாது கண்ணா..தனிமரமாகிப் போன காங்கிரஸ்.. மு.க.ஸ்டாலின், லாலு மட்டுமே ஆறுதல்!
டெல்லி: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அடாவடித்தனமாக அடம் பிடித்த காங்கிரஸை "இந்தியா" கூட்டணி கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கழற்றிவிட்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. "இந்தியா" கூட்டணியில் உள்ள திமுக, ஆர்ஜேடி கட்சிகள் மட்டுமே காங்கிரஸுடன் தற்போதைய நிலையில் கை கோர்க்கக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்ட நாள் முதலே இந்த அணி எத்தனை நாட்கள் நீடிக்கும்? என்கிற கேள்வியை எதிர்க்கட்சி முகாம்கள் எழுப்பின. ஆனாலும் தட்டு தடுமாறி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வரை தாக்குப் பிடித்து கொண்டிருந்தது இந்தியா கூட்டணி.

உதறிய திரிணாமுல், ஆம் ஆத்மி: இப்போது இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் கட்சி வழக்கம் போக கள நிலவரத்தை புரிந்து கொள்ளாமல் அடாவடித்தனமான அடம்பிடிக்கும் போக்கையே வெளிப்படுத்தி வந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முறிந்து போய் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
உறவை முறிக்க தயாராகும் அகிலேஷ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கொடுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால் அம்மாநில காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடுவோம்; ஜெயிப்போம் என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலத்தின் திரிணாமுல் , ஆம் ஆத்மியை தொடர்ந்து அகிலேஷ் யாதவும் காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முறித்து கொள்ளவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் இழுபறி: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் என்சிபி ஆகியவை ஏறத்தாழ தொகுதி உடன்பாட்டை நெருங்கிவிட்டன. அம்மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பிடிவாதம் காட்டி வருகிறது. இதனால் சிவசேனாவும் என்சிபியும் சேர்ந்தே காங்கிரஸை கழற்றிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற நிலைமைதான் உள்ளது.
நிதிஷ் கோபம்- லாலுவின் ஆறுதல்: தற்போதைய நிலையில் காங்கிரஸுடன் கை கோர்த்து நிற்கும் பெரிய கட்சிகள் இரண்டுதான். திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி). பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அம்மாநிலத்தில் ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளன. ஜேடியூ, ஆர்ஜேடி இரண்டும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எஞ்சிய தொகுதிகள்தான் கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 10 தொகுதிகளாவது தந்தாக வேண்டும் என அடம்பிடிக்கிறது. ஆனால் என்னதான் இந்தியா கூட்டணியை உருவாக்கியவராக இருந்தாலும் நிதிஷ்குமார், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மட்டும்தான் காங்கிரஸுக்கு சற்று ஆதரவாக இருக்கிறது. மேலும் அம்மாநிலத்தில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் இணக்கமாக உடன்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
திமுகவின் தொகுதி பங்கீடு பார்முலா: அதேபோல காங்கிரஸுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி என்பது திமுக தலைமையில்தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதேபோல பிற மாநிலங்களைப் போல காங்கிரஸ் இங்கே அடம்பிடித்தால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்ட கதைதான். திமுகவைப் பொறுத்தவரையில் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதைப் போல 9 அல்லது ஒரு தொகுதி குறைவு- கூடுதல் என்கிற நிலையில் தொகுதி பங்கீட்டு பார்முலாவை முன்வைக்கிறது. காங்கிரஸ் கட்சியோ அதிகமான மிதப்பில், 15 இடங்கள் தரனும்; 18 இடங்கள் கேட்போம் என சவடால் விட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் திமுக அணியில் பாமக இணைந்துவிட்டால் 4 அல்லது 5 இடங்கள்தான். தற்போதைய நிலையில் திமுக கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக் கொண்டு கமுக்கமாக போட்டியிட்டு வெல்லும் வழியைத்தான் காங்கிரஸ் பார்க்க வேண்டும். இல்லை எனில் அதிமுக 15 இடம் தரும்; 20 சீட் தரும் என்றெல்லாம் அலைபாய்ந்தால் அந்தோ பரிதாபம்! அதோ கதிதான் காங்கிரஸுக்கு என்கிற கள யதார்த்தத்தை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications