ஆஹான் கூட்டணி தர்மமா? வயநாடு தொகுதியை கை கழுவுகிறார் ராகுல் காந்தி? இந்த இரு மாநிலங்களுக்கு குறி?
டெல்லி: லோக்சபா தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இம்முறை போட்டியிடமாட்டார் என்றும் கர்நாடகா அல்லது தெலுங்கானாவின் ஒரு தொகுதியிலும் உ.பி. அமேதி தொகுதியிலும் போட்டியிடக் கூடும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2019 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். நேரு குடும்பத்தின் பாரம்பரியமான அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியது காங்கிரஸுக்கு பேரிடியாக அமைந்தது. ஆனாலும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அபாரமான வெற்றியை ராகுல் காந்தி அறுவடை செய்தது ஆறுதலாகவும் அமைந்தது.

வயநாடு நிலவரம்தான் என்ன?: தற்போதைய தேர்தலில் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். "இந்தியா" கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸும் சம வலிமையுடன் இருப்பதால் லோக்சபா தேர்தலில் தனித்தே களமிறங்குகின்றன. அதே நேரத்தில் "இந்தியா" கூட்டணியின் தலைவர்களே எதிரும் புதிருமாக போட்டியை எதிர்கொள்வது சாத்தியமே இல்லாதது; இந்தியா கூட்டணியை இந்த தலைவர்களை சிதறடித்ததாகும் என சுட்டிக்காட்டப்பட்டும் வருகிறது. இதனால் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறை போட்டியிடாமல் இருக்கவே அதிக வாய்ப்புகள் எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகா, தெலுங்கானாவில் போட்டி?: ராகுல் காந்தி வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடாமல் போனால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா அல்லது தெலுங்கானா மாநிலங்களில் எளிதாக வெல்லும் வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு லோக்சபா தொகுதியில் இம்முறை போட்டியிடக் கூடுமாம். அத்துடன் தாம் தோற்கடிக்கப்பட்ட அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் களமிறங்க கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி போட்டியிடுவதால் கர்நாடகா அல்லது தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் உற்சாகம் கிடைக்கும் என்பதும் காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கையாம். ராகுல் காந்தி எங்கே போட்டியிடுவார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படக் கூடும் எனவும் தெரிவிக்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications