‛அத்வானியின் கோட்டை’.. பாஜக தோற்கவே தோற்காது.. காந்தி நகரில் அமித்ஷா களமிறங்குவது ஏன்? சுவாரசியம்
டெல்லி: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியின் முக்கிய பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது காந்தி நகர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்கே அத்வானி ஆகியோரின் கோட்டை என்பதும், காந்திநகர் தொகுதியின் பின்னணி பற்றிய விபரம் வருமாறு:
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2019 ல் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் நாடாளுமன்ற தொகுதி குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த தொகுதி 1989 க்கு பிறகு பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. 1989ல் இருந்து 2014 வரை மொத்தம் 10 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 1991ல் எல்கே அத்வானி வெற்றி பெற்றார். 1996ல் வாஜ்பாய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் லக்னோ தொகுதியிலும் வெற்றி பெற்றதால் காந்திநகர் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எல்கே அத்வானி வெற்றி பெற்றார். 2019ல் எல்கே அத்வானிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து 2019ல் அமித்ஷா காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அமித்ஷா மொத்தம் 8,94,000 ஓட்டுகள் பெற்றதோடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதுர்சின் ஜாவன்ஜியை(பெற்ற வாக்குகள் 3,37,610) 5 லட்சத்து 57 ஆயிரத்து 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்நிலையில் தான் மீண்டும் அமித்ஷா காந்தி நகர் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications