சாதித்து காட்டிய கார்கே, ராகுல் காந்தி! 10 ஆண்டுகளுக்கு பிறகு.. 100+ இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!
டெல்லி: காங்கிரஸ் கட்சி இப்போது 100+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் 100+ இடங்களில் வெல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் கடந்த 1.5 மாதங்களாக நடந்த லோக்சபா தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது.
காங்கிரஸ்: கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்த முறை பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தற்போது வரை காங்கிரஸ் கூட்டணி 222 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாகக் காங்கிரஸ் மட்டும் 100+ இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் மூன்று இலக்கில் எம்பி தொகுதிகளை வெல்லும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்கள்: கடந்த 2014இல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்ற நிலையில், காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றது. 2009இல் காங்கிரஸ் 206 இடங்களில் வென்ற நிலையில், 2014இல் அது 44ஆக சுருங்கிப் போனது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் கூட பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியே கிடைத்தது. பாஜக 303 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்றது. முந்தைய தேர்தலைக் காட்டிலும் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் கூடுதல் இடங்களில் வெல்ல முடிந்தது.
காங்கிரஸ் முன்னிலை: இந்தச் சூழலில் இப்போது 100+ இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் 100+ இடங்களில் வெல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த முறை காங்கிரஸ் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய நிலையில், அது பெரியளவில் கை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications