யாருக்கு மெஜாரிட்டி? பாஜக vs "இந்தியா" கூட்டணி! தலையெழுத்தை தீர்மானிக்க போவதே இந்த 5 மாநிலங்கள் தான்
டெல்லி: இன்று லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இதில் யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் ஐந்து மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 5 மாநிலங்கள் எவை.. ஏன் அது முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நடந்தது.

கூட்டணி: இதில் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பாஜகவும் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியும் பலமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குஜராத்தில் சூரத் மாநிலத்தில் பாஜக ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் 5 மாநிலங்களில் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. யாருக்குப் பெரும்பான்மை என்பது இந்த மாநிலங்களில் எத்தனை இடங்களில் வெல்கின்றனர் என்பதைப் பொறுத்தே இருக்கும்.
மகாராஷ்டிரா: இதில் முக்கியமானது மகாராஷ்டிரா. நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து அதிகபட்சமாக 48 எம்பி சீட் இடங்களைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. கடந்த முறை இந்த 48இல் 41 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி (பாஜக 23, சிவசேனா 18) வென்றது. ஆனால், இந்த முறை அங்கு அரசியல் சூழல் மொத்தமாக மாறி இருக்கிறது. சிவசேனா, என்சிபி ஆகியவை இரு பிரிவுகளாக உள்ளன.
ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி இந்த முறை பாஜக கூட்டணியில் களமிறங்குகிறது. அதேநேரம் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி இந்தியா கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இந்த இரு தரப்பில் யாருக்கு அதிக சீட் என்பது முக்கியமாக இருக்கும்.
மேற்கு வங்கம்: அடுத்து மிக முக்கியமான மாநிலம் மேற்கு வங்கம். நாட்டில் மூன்றாவது அதிகபட்சமாக 42 சீட்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அதிகபட்சமாக 22 சீட்களில் வென்றது. ஆனால், அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி கொடுத்தது என்னவோ பாஜக தான். முந்தைய லோக்சபா தேர்தலில் 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக இந்த முறை 18 சீட்களை அள்ளியது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது.
கடந்த முறையைப் போலவே இந்த முறையும் அங்கு கடும் போட்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இந்த முறை முதலில் மம்தா இந்தியா கூட்டணியில் இருந்தார். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேற்கு வங்கத்தில் தனித்துக் களமிறங்கினார். அதேபோல பாஜகவும் தனித்துப் போட்டியிட்டது. இவை தவிரக் காங்கிரஸ் - இடதுசாரிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்கின. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துள்ளதால் இந்த முறை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார்: அடுத்து லிஸ்டில் இருப்பது நான்காவது அதிக எம்பி இடங்களைக் கொண்ட பீகார். கடந்த முறை பீகாரில் 40இல் 39 தொகுதிகளை (பாஜக- 18, ஜேடியு- 16, எல்ஜேபி- 6) மொத்தமாகக் கைப்பற்றியது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே ஒரே ஒரு இடத்தில் வென்றது. ஆனால், கடந்த முறையைப் போல இந்த முறை பாஜகவால் பெரிய வெற்றியைப் பெற முடியுமா என்றால் அது சந்தேகம் தான் என்கிறார்கள் வல்லுநர்கள்.
ஆளும் நிதிஷ்குமார் மீது இருக்கும் அதிருப்தி இதில் பாஜக கூட்டணிக்கு எதிராக வேலை செய்துள்ளது. நிதிஷ் குமார் அடிக்கடி கூட்டணி மாற்றி வரும் நிலையில், களத்தில் பாஜக- ஜேடியு தொண்டர்களிடையே இணக்கம் காணப்படவில்லை. மறுபுறம் ஆர்ஜேடி தரப்பில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மிகப் பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்தது. இருப்பினும், அதைத் தாண்டி மோடி ஃபேக்டர் பாஜகவுக்கு வெற்றியைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.
ஒடிசா: அதேபோல ஒடிசாவும் முக்கியமான மாநிலமாக இருக்கிறது. அங்கு 21 எம்பி சீட்கள் இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பது முக்கியம். கடந்த தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 12இல் வென்ற நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த முறை அங்கு பாஜக மிகத் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்த நிலையில், அதற்கு பலன் கிடைக்குமா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
கர்நாடகா: அடுத்து முக்கியமான மாநிலம் என்றால் அது கர்நாடகா.. தென் மாநிலங்களில் பாஜக வலிமையாக இருக்கும் ஒரே மாநிலம். இங்கு மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில், பாஜக மொத்தமாக 26இல் வென்றது. இந்த முறை அதே அளவுக்கு வெற்றி பெற முடியுமா என்பதே சந்தேகம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது, பிரஜ்வல் விவகாரம் கர்நாடகாவில் பாஜகவைப் பாதிக்கும் என்றே சொல்லப்படுகிறது. கடந்த முறையை விட குறைவான சீட்களில் வென்றாலும் பாஜக தான் அதிக இடங்களைப் பெறும் என்றே எக்ஸிட் போல் சொல்கிறது. அது உண்மையாகுமா என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.
இவை தவிர உபியில் அகிலேஷ் யாதவ் கட்சி எத்தனை தொகுதிகளைப் பெறுகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் நிலைமை என்ன என்பதும் முக்கியமானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications