தமிழகத்தில் அதிமுகவுக்கு பேரிடி! பாஜக கூட 5 வெல்லுமாம்! எடப்பாடிக்கு பின்னடைவு! நியூஸ் 18 சர்வே
டெல்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்பது குறித்து நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 30 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என நியூஸ் 18 சர்வே முடிவுகளில் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை போல் இந்த தேர்தலிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்ல போகிறது என கணிப்புகள் சொல்கின்றன. அது போல் வாக்கு சதவீதம் என எடுத்துக் கொண்டால் திமுக கூட்டணி 51 சதவீதமும் பாஜக 13 சதவீதமும் அதிமுக 17 சதவீதமும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டு 20 லும் வென்றது. அது போல் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது. கடந்த முறை அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அதுவும் தென் தமிழகத்தில் தேனி தொகுதியில்!
அங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வென்றார். ஒட்டுமொத்தமாக சொல்ல போனால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்டவைக்கு பெருத்த அடிதான். அது போல் வாக்கு சதவீதம் என பார்த்தால் கடந்த முறை அஇஅதிமுக 19.39 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த முறை இரு சதவீதம் குறைந்து 17 சதவீதம்தான் பெறும் என சொல்லப்படுகிறது.
அது போல் திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 53 சதவீதம் வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த முறை 2 சதவீதம் குறைந்து 51 சதவீதம் வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு முதல் தேர்தலை சந்திக்கிறார்.
ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் செல்வாக்கை நிரூபிக்க பாஜக கூட்டணியை கழற்றிவிட்டது அதிமுக. ஆனாலும் இந்த லோக்சபை தேர்தலில் பெருத்த அடிதான் என கணிப்புகள் சொல்கிறது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பவர்கள் உண்மையான அதிமுக இல்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டி வருகிறார். தற்போது இந்த தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளை போலவே எதிரொலித்தால் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications