5-ம் கட்ட தேர்தல்: ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல்- 695 பேர் போட்டி!
டெல்லி: 5-வது கட்டமாக நடைபெறும் 18-வது லோக்சபா தேர்தல் களத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 695 பேர் போட்டியிடுகின்றனர்.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

5-வது கட்ட லோக்சபா தேர்தல் மே 20-ந் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 5-வது கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
5-வது கட்ட தேர்தலில் மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 512 வேட்பு மனுக்களும் உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளில் இருந்து 466 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மகாராஷ்டிராவில் 301 வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது. மேலும் பல வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் இறுதி கட்டமாக 264 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 147 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது. மேலும் பலர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற பின்னர் 144 பேர் களத்தில் உள்ளனர். மிக குறைவாக லடாக்கில் 3 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
5-வது கட்ட தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை: பீகார் 5 ; ஜம்மு காஷ்மீர் 1 ;ஜார்க்கண்ட் 3; லடாக் 1 ; மகாராஷ்டிரா 13; ஒடிஷா 5; உ.பி. 14; மே. வங்கம் 7 என மொத்தம் 49 தொகுதிகள்.
8 மாநிலங்களின் 49 தொகுதிகள் விவரம்:
பீகார்: சீதாமர்ஹி, மதுபானி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர்
ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா
லடாக்: லடாக்
மகாராஷ்டிரா: துலே, டிண்டோரி, நாசிக், கல்யாண், பால்கர், பிவாண்டி, தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, வடகிழக்கு மும்பை , வடமத்திய மும்பை , தென் மத்திய மும்பை, மும்பை தெற்கு
ஒடிஷா: பர்கர், சுந்தர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா
உத்தரப்பிரதேசம்: மோகன்லால்கஞ்ச், லக்னோ, அமேதி, ரேபரேலி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, கவுசாம்பி, பாரபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா
மேற்கு வங்கம்: பாங்கான், பாரக்பூர், ஹவுரா, உலுபெரியா, ஸ்ரீராம்பூர், ஹூக்ளி, ஆரம்பாக்
ஜார்கண்ட்: சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக்
நட்சத்திர வேட்பாளர்கள்: உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார். ராகுல் காந்தி கடந்த முறை தோல்வி அடைந்த உ.பி. அமேதி தொகுதியில் காங்கிரஸின் கே.எல்.ஷர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். உ.பி. லக்னோ லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.
பீகார் சாரன் தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா களம் காண்கிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் களம் காண்கிறார்.












Click it and Unblock the Notifications