மோடி முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வந்த தலைவர்களின் லிஸ்ட்
டெல்லி: 195 லோக்சபா தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங், சபாநாயகர் ஓம்பிர்லா முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை பாஜகவின் பிரபலமான தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. டெல்லி பாஜக அலுவலகத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 47 இளைஞர்களுக்கும் 28 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மீண்டும் களமிறங்கி உள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதியிலும், கிரண் ரிஜூஜூ அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
195 வேட்பாளர்கள்.. வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி! வெளியானது பாஜகவின் வேட்பாளர் பட்டியல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் களமிறங்குகிறார். உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடிகை ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளா திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமிறங்கிறார். கேரளா ஆட்டிங்கால் தொகுதியில் மத்திய அமைச்சர் முரளீதரன் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications