எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத காங்... பிரசாந்த் கிஷோரால் மட்டும் மீட்டெடுத்துவிட முடியுமா?
டெல்லி: எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. என்னதான் வியூகங்கள் வகுத்தாலும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரால் காங்கிரஸ் கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியுமா? என்பது கேள்விக்குறி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக, பா.ஜ.க) அசைக்க முடியாத பெரும்பான்மை பலம் கொண்டதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பெயரளவுக்குதான் தேசிய கட்சியாக இருக்கிறது. லோக்சபாவில் பாஜகவுக்கு 301 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 52 எம்.பிக்கள்தான் இருக்கின்றனர். மாநில கட்சியான திமுகவுக்கு 24, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு 22, திரிணாமுல் காங்கிரஸுக்கு 22 எம்.பிக்கள் உள்ளனர்.
அதாவது மாநில கட்சிகளுக்கு சமமான ஒரு நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றதால் ஆறுதலான வெற்றி கிடைத்தும் வருகிறது. இப்படியான நிலையில்தான் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

காங்கிரஸில் பி.கே?
2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை காங்கிரஸுக்கு பிரசாந்த் கிஷோர் வழங்குவார் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியிலேயே பிரசாந்த் கிஷோர் இணைந்துவிடுவார் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனிடையே காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் மெகா முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸும் மாநில கட்சிகளும்
தேசிய அளவில் பாஜக கூட்டணியுடன் சமமாக மோதுவதற்கு காங்கிரஸுக்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவை. அதுவும் அனைத்து மாநில கட்சிகளும் ஓரணியில் திரளும்போதுதான் இது சாத்தியமாகும். தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தள் ஆகியவை இடம்பெறுவது உறுதி. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டு பிரச்சனை வரும் என்பதற்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க சமாஜ்வாதி கட்சி மறுத்துவிட்டது.

மாஜி பாஜக கூட்டணி கட்சிகள்
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலிதளம், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி அரசு நடைபெற்று வந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய அளவிலான அணியில் சிவசேனா இடம்பெறுமா என்பது ஊசலாட்டத்துக்குரியதுதான். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆகியவை பாஜகவுடன் மல்லுக்கட்டிக் கொண்டு காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா? என்பதும் கேள்விக்குறி.

மாயாவதி, கே.சி.ஆர்,
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி என்னதான் பாஜகவை கடுமையாக விமர்சித்தாலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அணியிக்கு அது வருமா? என்பது உறுதியானது அல்ல. அதேநிலையில்தான் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான தேசிய அளவிலான கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற்றாலும் கேரளாவில் இந்த கூட்டணி எடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவான ஒன்று. கேரளாவில் அரசியல் என்பதே இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான். இந்த இருதுருவ அரசியலில் தலைகீழ் மாற்றங்களுக்கு துளியும் சாதகம் இல்லை.

காங். கலகக் குரல்கள்
இதுதான் தேசிய அரசியல் கள நிலவரம். இப்போதைய நிலையில் காங்கிரஸுக்கு பிரகாசமான எதிர்காலம் எதுவும் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கலகக் குரல்கள் சரி செய்யப்படாமல் இருக்கின்றன. லோக்சபா தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளாகியும் கட்சிக்கு ஒரு தலைவரை கூட நியமிக்க முடியாத பரிதாபத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை இருக்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் என காங்கிரஸ் செல்வாக்கு செலுத்துகிற/ ஆட்சி செய்கிற மாநிலங்களில் கூட சரிக்கு சமமான அதிருப்தி கோஷ்டிகள் உள்ளன. இந்த அதிருப்தி கோஷ்டிகளை சமாளிக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடத் தலைமை.

யார் பிரதமர் வேட்பாளர்?
நினைப்பில் தேசிய கட்சியாக இருந்தாலும் செயலில் மாநில கட்சிகளைவிட படுபலவீனத்தில்தான் காங்கிரஸ் இருக்கிறது. அதாவது நடுக்கடலில் மூழ்கிக் கொண்டே இருக்கிற ஒரு கப்பலாகத்தான் காங்கிரஸ் உள்ளது. இந்த கப்பலைத்தான் பிரசாந்த் கிஷோர் மீட்டுவிடுவார் என்கிற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இருக்கிறது. என்னதான் எதிர்க்கட்சிகளை ஓரணியில் பிரசாந்த் கிஷோர் திரட்டி காட்டினாலும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் நிச்சயம் முரண்பாடுகள் வெடிக்கும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக போன தேர்தலிலேயே எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை; இப்போதைக்கு சரத்பவார், மமதா பானர்ஜி என பிரதமர் பதவிக்கான ரேஸில் குதிரைகள் ஓடவும் தொடங்கிவிட்டன. ஒருவேளை மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளர் என்றால் இடதுசாரிகளால் ஏற்க முடியாது. இப்படி ஒவ்வொரு திசையிலும் முட்டுச் சந்தாகத்தான் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

காங்கிரஸ் சுய பரிசோதனை
காங்கிரஸ் கட்சி தலைமையின் அதி மந்தமான செயல்பாடு, எதிர்க்கட்சிகள் இடையே உருவாக்கவே முடியாத ஒற்றுமை.. இப்படித்தான் கள யதார்த்தம் இருக்கிறது. இப்படியான எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் வலிமை கூடத்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி தம்மை சுயபரிசோதனை செய்து தமக்கு தாமே மீட்சியை உருவாக்கிக் கொள்ளாத வரையில் பாரதிய ஜனதாவின் விஸ்வரூபத்தை எத்தனை பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் அசைத்துகூட பார்க்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications