அமெரிக்கா அவ்வளவு தான்.. மொத்தமாக முடங்கியது! 6 லட்சம் பேருக்கு வேலை போச்சு.. டிரம்ப்பால் என்ன யூஸ்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசால் செலவின மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அமெரிக்க பெடரல் அரசு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முடங்கியுள்ளது. இன்றோடு அமெரிக்க ஷட் டவுன் 36 நாட்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட ஷட் டவுனாக இது மாறியுள்ளது.
அமெரிக்காவில் செலவினங்கள் தொடர்பான மசோதாவில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அங்குக் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பெடரல் அரசு முடங்கியுள்ளது. இந்த ஷட் டவுன் 36வது நாளை நடந்துள்ளது..

ஷட் டவுன்
இதற்கு முன்பு ட்ரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது 2018-2019 காலகட்டத்தில் பெடரல் அரசு 35 நாட்கள் முடங்கியிருந்தது. அப்போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவியதால் ஷட் டவுன் ஆனது. அதுவே அமெரிக்காவின் மிக பெரிய ஷட் டவுனாக இருந்த நிலையில், இந்த ஷட் டவுன் அதையும் தாண்டிவிட்டது.
சிக்கல் என்ன
பைடன் ஆட்சிக் காலத்தில் ஏழைகள் இன்சூரன்ஸ் பெற உதவும் வரிச் சலுகைகள் கொண்டு வரப்பட்டன. அந்த வரி சலுகையை இந்தாண்டு உடன் முடியும் நிலையில், அதை நீட்டித்தால் மட்டுமே நிதி மசோதாவுக்கு ஆதரவளிப்போம் என ஜனநாயகக் கட்சியினர் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். இந்த வரிச் சலுகைகள் 'ஒபாமகேர்' என்றும் அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுச் சட்டம் மூலம் மக்களுக்கு உதவுகின்றன. இந்த வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், டிரம்ப் அரசு வரி சலுகையை விவகாரத்தில் உறுதி தர விரும்பவில்லை. கொரோனா காலத்தில் அது தற்காலிக உதவித் திட்டமாகவே கொண்டு வரப்பட்டது என்றும் அதை நீட்டிக்க முடியாது என்றும் டிரம்ப் அரசு சொல்கிறது. மேலும், வரி சலுகைக்கும் செலவின மசோதாவுக்கும் தொடர்பில்லை என்பதால் அதை இப்போது கேட்கவே தேவையில்லை என்றும் டிரம்ப் கட்சியினர் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே இழுபறி நீட்டிக்கிறது.
14 முறை தோல்வி
ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வர இதுவரை 14 முறை வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஆனால், அவை அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தன. அமெரிக்காவின் செனட் சபையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 53 குடியரசுக் கட்சியினர், 45 ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கும் இரண்டு சுயேச்சைகள் அடங்குவர்.
அதான் பெரும்பான்மை இருக்கிறதே என நீங்கள் கேட்கலாம். ஆனால், செலவினங்கள் மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவை. எனவே, குறைந்தபட்சம் 7 ஜனநாயகக் கட்சியினர் கட்சி மாறி வாக்களிக்க வேண்டும். அது நடக்காததால் தான் ஷட் டவுன் தொடர்கிறது. இந்த ஷட் டவுன் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடும் நஷ்டம்
மேலும், இந்த ஷட் டவுன் காரணமாக அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஷட் டவுன் இன்னும் இரு வாரங்கள் நீடித்தால், இழப்பு 11 பில்லியன் டாலரை எட்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்..
இதனால் அங்கு பெடரல் வங்கி ஊழியர்கள் கட்டாய விடுவிப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். குறைந்தது 670,000 பெடரல் ஊழியர்கள் ஊதியம் இல்லாததால் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 7.3 லட்சம் பேர் அத்தியாவசியப் பணியாளர்களாகக் கருதப்படுவதால் அவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இந்த ஷட் டவுன் முடியும் வரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. இப்படி அமெரிக்கா எல்லாப் பக்கமும் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications