கேஸ் தட்டுப்பாடு.. நாடாளுமன்ற வளாகத்தில் மாதிரி சிலிண்டருடன் ராகுல் உள்பட எம்பிக்கள் தர்ணா
டெல்லி: நாட்டில் நிலவும் எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் இந்த தர்ணாவில் பங்கேற்ற நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஈரான் போரால் நம் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கேஸ் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் செல்கிறது.
இருப்பினும் கேஸ் சிலிண்டர் முன்பதிவு தேதிக்கான இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிலிண்டருக்கு மாற்று
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் சப்ளை பாதிப்பால் ஹோட்டல்கள், பிஜிக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. அங்கு கேஸ் சிலிண்டர்களுக்கு பதில் விறகு, இண்டக்ஷன் ஸ்டவ் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் தர்ணா
இதற்கிடையே தான் இல்லத்தரசிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சிலிண்டர் மாதிரியுடன்
அப்போது அவர்கள் கேஸ் சிலிண்டர் மாதிரியை கொண்டு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அதேபோல் கேஸ் தட்டுப்பாட்டு பிரச்சனையை குறிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். சமையல் எரிவாயு விநியோகத்தில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.
கேசி வேணுகோபால்
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், ''இந்த கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை சாதாரண குடிமக்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தியா முழுவதும் எல்பிஜி பற்றாக்குறையால் மக்கள் நீண்டவரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அதோடு கோடிக்கணக்கான சாமானியர்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் மூடப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு சரியாக கையாளவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications