தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி.. "பாஜக vs காங்கிரஸ்!" மத்திய பிரதேசத்தில் வெற்றி யாருக்கு! புது சர்வே
டெல்லி: இன்னும் சில மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த புதிய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கு முன்பு இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இது அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுக்கு ஒரு அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்: இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜகவைக் காங்கிரஸ் மிகப் பெரியளவில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள் மத்தியிலும் நல்ல உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதே வெற்றியை இந்த தேர்தலிலும் பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் இறங்குகிறது.
மறுபுறம் பாஜக இந்த 3 மாநிலங்களில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் தான் பாஜக எப்போதும் வலுவாக இருக்கும். எனவே, இந்த 3 மாநில தேர்தலில் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்குகிறது. மேலும், லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடைபெறும் முக்கிய தேர்தலாக இது இருக்கும் நிலையில், பாஜக இதில் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
மத்தியப் பிரதேசம்: இதில் மத்தியப் பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குக் கடந்த 2018இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை கிடைத்தது. மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்கள் கிடைத்தது. மறுபுறம் பாஜகவுக்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து காங்கிரஸ் ஆட்சியை அமைத்த நிலையில், கமல்நாத் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அங்கே காங்கிரஸ் ஆட்சி 15 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
அங்குக் காங்கிரஸின் இளம் தலைவராக இருந்த சிந்தியா காங்கிரஸில் கலகம் செய்தார். அவருடன் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமானார்கள். இதனால் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்த நிலையில், மீண்டும் சவுஹான் முதல்வரானார். இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு மத்தியப் பிரதேசம் ரெடியாகி வருகிறது. இதற்கிடையே ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற அமைப்பு நடத்திய மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
வெல்லப் போவது யார்: இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 44% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜகவுக்கு 42% வாக்குகளும் இதர கட்சிகளுக்கு 14% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சிக்கு 116 இடங்கள் தேவை.
அதன்படி இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என ஸ்மால் பாக்ஸ் சர்வே கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 129- 136 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவைப் பொறுத்தவரை 82-89 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 1 முதல் 5 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியம்: இந்த சர்வேயை ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. முன்பு தேர்தல் நடைபெற்ற குஜராத் (பாஜக), டெல்லி (ஆம் ஆத்மி), இமாச்சல் பிரதேசம் (காங்கிரஸ்), கர்நாடகா (காங்கிரஸ்) ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பு தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்தியப் பிரதேச தேர்தல் குறித்த இந்த தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications