இதுதான்யா நட்பு.. அதானி பற்றி மோடி வாயே திறக்கவில்லை பார்த்தீங்களா.. சு.வெங்கடேசன் சாடல்
அதானி பற்றிய கேள்விக்கு நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
டெல்லி: காந்தி, நேரு, எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி ஆகியோர் பற்றி அவையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களை பற்றி மோடி பேசியதாக சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ஆனால் எல்லோரும் எழுப்பிய அதானி பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 31ம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசு தலைவராக திரவுபுதி முர்மு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவேயாகும். குடியரசு தலைவர் தனது உரையில் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால கனவு குறித்தும் தெளிவுபடுத்தினார். தற்போது குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதானி விவகாரம்
இதில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி கடும் அமளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதனிடையே நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை கலைத்தது இந்திரா காந்தி தான்.

கருணாநிதி பற்றி மோடி
அவர் மட்டும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று திமுக எம்பி-க்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதேபோல், எம்ஜிஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி கலைத்திருக்கிறது.

நேருவின் பெயர்
தற்போது எதிர்க்கட்சி வரிசையில் நிற்கும் சரத் பவார் முதலமைச்சராக இருந்த போது, அவரின் ஆட்சியையும் கலைத்ததும் காங்கிரஸ் தான். ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், நேரு சிறந்த மனிதர் எனில் அவரது குடும்பத்தினர் நேருவின் பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்கவில்லை. நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்வதால் என்ன அவமானம் ஏற்படப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

நட்பின் இலக்கணம்
இந்த விவகாரம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதில், காந்தி, நேரு, எம் ஜி ஆர், என்டிஆர், கருணாநிதி ஆகியோரைப் பற்றி இரு அவைகளிலும் கேள்வி எழவில்லை. ஆனால் அவர்களைப்பற்றிப் பேசினார் பிரதமர். எல்லோரும் எழுப்பியது அதானியைப் பற்றிய கேள்வி. ஆனால் அதற்கு வாய்த்திறக்கவில்லை. நட்பின் இலக்கணத்தை நாட்டுக்குக் கற்றுக்கொடுத்தார் பிரதமர் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications