பணம் வாங்கியது உண்மைதான்! தொழிலதிபர் பகீர் அறிக்கை.. "பின்னணியில் பிரதமர் அலுவலகம்!" மொய்த்ரா பதிலடி
டெல்லி: லோக்சபாவில் கேள்வி கேட்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்பி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதை ஹிரானந்தானி மற்றும் மொய்த்ரா என இருவருமே மறுத்திருந்தனர்.

இதற்கிடையே மொய்த்ரா தன்னிடம் லாகின் ஐடியை பகிர்ந்தது உண்மைதான் என்று தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி தாக்கல் செய்ததாகக் கூறி சில ஆங்கில ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதற்கும் மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரமாண பத்திரம்: தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி தாக்கல் செய்தாக கூறப்படும் பிரமாணப் பத்திரம் என்று ஆங்கில ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளது.. மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற ஐடியை பயன்படுத்தியது உண்மைதான் என்ற அவர், மொய்த்ரா தன்னிடம் இருந்து ஆடம்பரப் பொருட்களைப் பரிசாகப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், "மஹுவா மொய்த்ரா சீக்கிரம் தேசிய அளவில் முக்கியமான நபராக உருவாக வேண்டும் என விரும்பினார். பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினால் விரைவாகப் புகழ் அடையலாம் என அவரது நண்பர்கள் அவருக்குக் கூறியதாகத் தெரிகிறது. கவுதம் அதானியை தாக்கி பேசுவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என அவர் நம்பினார். ஏனென்றால் இருவரும் ஒரே காலத்தில் வளர்ந்தவர்கள்.. இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
லாகின் ஐடி கொடுத்தார்: அதானி குழுமத்தைக் குறிவைத்து அரசைச் சங்கடப்படுத்தும் வகையில் மொய்த்ரா சில கேள்விகளை வடிவமைத்தார். மேலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரது மின்னஞ்சல் ஐடியை என்னிடம் பகிர்ந்து கொண்டார், இதன் மூலம் நான் அவருக்குத் தகவல்களை அனுப்ப முடியும்.. அதை அவரால் நாடாளுமன்றத்தில் கேள்விகளாக எழுப்பினார். பின்னர் நானே நேரடியாகக் கேள்விகளைப் பதிவிடும் வகையில் அவரது லோக்சபா ஐடி மற்றும் பாஸ்வோர்ட்டையும் கூட கொடுத்தார்.
இதில் அவருக்கு மேலும் பலர் உதவியாக இருந்தனர். அதானி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் ராகுல் காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடினார். மேலும், ஃபைனான்சியல் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட சர்வதேச பத்திரிகையாளர்களையும் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டார். மேலும், அதானி குழுமத்தின் முன்னாள் ஊழியர்கள் எனக் கூறும் சிலரிடம் இருந்தும் விவரங்களை அவர் பெற்றார்.
ஏன் உதவினேன்: அதில் சில தகவல்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிலையில், அதன் அடிப்படையில் நான் அவரது லோக்சபா லாகின் மற்றும் பாஸ்வோர்ட்டை பயன்படுத்தித் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டேன். எதிர்க்கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் பினாகி மிஸ்ரா ஆகியோருடன் மொய்த்ராவுக்கு நல்ல நட்பு இருந்ததால்.. அவர் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களில் எனக்குச் சாதகம் கிடைக்கும் என நான் நினைத்தேன்.
இது ஒரு பக்கம் இருக்க அவர் என்னிடம் பல உதவிகளை என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். விலையுயர்ந்த பல ஆடம்பரப் பொருட்களைப் பரிசளிக்கும்படி கேட்டார். டெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவைப் புதுப்பிக்க உதவி கேட்டார். மேலும் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல பயணச் செலவுகள் உள்ளிட்ட பல உதவிகளைக் கேட்டார். பல சமயங்களில், அவள் என்னைத் தேவையல்லாமல் பயன்படுத்துகிறார் என்றும் இதனால் நான் விரும்பாத விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.. ஆனால் சில காரணங்களால் எனக்கு வேறு வழியில்லை" என்று அவர் கூறியதாக இருந்தது.
பதிலடி: இதற்கிடையே இதற்கும் மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் ஐந்து முக்கிய கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அதில் அவர்
இந்த பிரமாண பத்திரம் லெட்டர் பேட் இல்லாமல் வெறுமன வெள்ளை பேப்பரில் வெளியிடப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தர்ஷன் ஹிரானந்தானிக்கு சிபிஐ உள்ளிட்ட யாரும் சம்மன் அனுப்பாத நிலையில், அவர் எங்கே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். லீக்கான இந்த பேப்பரை எழுதியதே பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் அவர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், சிபிஐ ரெய்டு என்று மிரட்டி இதில் தர்ஷன் ஹிரானந்தானிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் தர்ஷன் ஹிரானந்தானி தனது தொழிலைக் காப்பாற்ற இப்படிச் செய்துள்ளார் என்பது புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் எல்லாம் தன்னை அச்சுறுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து அதானி விவகாரத்தில் கேள்விகளை எழுப்புவேன் என்றும் இதில் எந்த விலையைக் கொடுக்கவும் ரெடியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications