மனைவி ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னால் செல்லுபடி ஆகுமா! நீதிமன்றம் சொன்ன அதிரடி பாயிண்ட்!
டெல்லி: திருமண உறவுகள் பிரியும்போது, மனைவிக்கு ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டும். ஆனால், சிலர் தங்களுக்கு அப்படியான எந்த செட்டில்மென்டும் வேண்டாம் என்று சொல்வதுண்டு. இருப்பினும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளபடுமா? என்பது குறித்து நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில், மனைவி ஒரு குறிப்பிட்ட தொகைக்காக எதிர்காலத்தில் கணவரிடம் ஜீவனாம்சம் கோரும் உரிமையைக் கைவிடுவதாகச் செய்யும் ஒப்பந்தம் பொதுக் கொள்கைக்கு எதிரானது எனக் கூறியுள்ளது.

விவாகரத்து வழக்கு ஒன்றை ஹோஷியார்பூர் குடும்ப நீதிமன்றம் விசாரித்திருந்தது. அதில், மனைவிக்கு மாதம் ரூ.6000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நீதிமனறம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கணவர் தனது மனுவில்,
"மனைவிக்கு ரூ.60,000 கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டார். எனவே ஜீவனாம்சம் வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். மனைவிக்கு கை கால்கள் சரியாக இருக்கின்றன. அவர் வேலைக்கு போய் சம்பாதிக்கிறார். எனவே ஜீவனாம்சம் வேண்டாம் என்று உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
கணவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி ஷாலினி சிங் நாக்பால் தலைமையிலான அமர்வு, மிக முக்கிய உத்தரவை கொடுத்திருக்கிறது. "மனைவி உழைக்கிறார் என்பதால், அவர் ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என்று கருத முடியாது. நீதிமன்றம் கணவனை ஜீவனாம்சம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தும் வரை, மனைவி உட்கார்ந்து பட்டினி கிடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முறையல்ல.
மனைவி நீதிமன்றத்தில் அல்லது வேறு விதமாக, சில தொகையைப் பெற்று எதிர்காலத்தில் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் துறப்பது பொதுக் கொள்கைக்கு எதிரானது. இது அவளை ஜீவனாம்சம் கோருவதைத் தடை செய்யாது. மனைவி தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று முன்னர் எழுதி கொடுத்து இருந்தாலும் கூட, பின்னர் அவர் அதை கோருவதற்கு உரிமை இருக்கிறது.
கணவர், கல்வித்தகுதி மற்றும் மின் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். அவர் நலமான, உடல் உழைப்பு செய்யக்கூடிய திறமையான தொழிலாளி. கிராமத்தில் கொத்தனாராகப் பணியாற்றுகிறார். குறைந்தபட்சமாக மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கக்கூடியவர். எனவே ஜீவனாம்சம் வழங்க முடியும். அதை இனி வரும் காலங்களில் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications