15+ கிமீ டிராபிக்.. நடுரோட்டில் சிக்கிய தமிழர்கள்! மணாலிக்கு டூர் போன இடத்தில் ஷாக். என்ன நடந்தது?
டெல்லி: லாங் வீக் எண்ட்டை கொண்டாட இமாச்சலப் பிரதேசம் போன சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடுமையான பனிப்பொழிவால் சுமார் 15 கிமீ தூரத்திற்கு அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்களிலும் ரூம் இல்லாததால் பொதுமக்கள் கார்களிலேயே சிக்கியுள்ளனர். சில தமிழகப் பயணிகளும் இதில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக லாங் வீக் எண்ட் வந்தாலேயே பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் பழக்கம் இந்தக் காலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீக் எண்ட்டிலும் எப்படி ஊட்டி, கொடைக்கானலில் கூட்டம் நிரம்புகிறதோ அதேபோல வட இந்தியாவில் மக்கள் இமாச்சலைத் தேர்வு செய்வார்கள்.

மணாலி
குளுகுளு கிளைமேட் ஈஸியாகவும் சென்றுவிடலாம் என்பதால் லாங் வீக் எண்ட்டிற்கு மக்கள் தேர்வு செய்யும் இடமாக இமாச்சலப் பிரதேசம் இருக்கிறது. அங்குள்ள மணாலி உலகளவில் பேமஸானது. இதற்கிடையே மணாலியில் இந்த வாரம் திடீரெனப் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில், சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு மிக மோசமான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
டிராபிக் என்றால் ஏதோ கொஞ்சம் கூடுதல் நேரம் சாலையில் சிக்கிக் கொண்டார்கள் என இல்லை. அங்குப் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து முடங்கியதால் 24 மணி நேரத்திற்கும் மேலாகக் கூட பலரும் சிக்கித் தவித்தனர். நீண்ட வறட்சிக்குப் பின் பெய்த பனிப்பொழிவு குளிர்கால அழகை அளித்தாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
15 கிமீ டிராபிக்
குல்லு மாவட்ட மணாலி சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.. மணிக்கணக்கில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோத்திக்கும் மணாலிக்கும் இடையே 15 கி.மீ தூரத்திற்குக் கூட நெரிசல் நீடித்தது. 3 மாதங்களுக்குப் பிறகு அங்குச் சட்டென பனிப்பொழிவு அதிகரித்த நிலையில், சரியாக அதேநேரம் இந்த லாங் வீக்எண்ட் காரணமாக மக்களும் படையெடுத்ததால் டிராபிக் பாதிப்பு மோசமடைந்தது.

ஹோட்டல்களிலும் இடமில்லை
மணாலி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்கள் 100% நிரம்பின. இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஒரு பக்கம் சாலை முழுக்க டிராபிக்.. இன்னொரு பக்கம் ரூம்களும் இல்லை. இதனால் மக்கள் பலரும் தங்கள் சாலைகளில் கார்களிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் சிலர் குல்லு நோக்கிச் செல்ல நேர்ந்தது.
டெல்லி, குருகிராம், சண்டிகரில் இருந்து இமாச்சலைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களுக்கு டிராபிக்கும் சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலுமே மிஞ்சியது. வட இந்தியா மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் கூட சில ஜோடிகள் மற்றும் குடும்பத்தினர் லாங் வீக்எண்ட்டிற்காக இமாச்சல் சென்றுள்ளனர். அவர்களும் கூட சாலைகளிலேயே சிக்கியுள்ளனர். இது குறித்து அவர்களும் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
சிக்கிய சுற்றுலாப் பயணிகள்
மோசமான பனிப்பொழிவு மணாலியை முடக்கியது.. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உறைபனி நிலையில் சிக்கித் தவித்தனர்.. சுமார் இரண்டு அடி பனியால் சாலைகள் மூடப்படவே முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டது. இந்தளவுக்கு டிராபிக் பாதிப்பு அங்கு இதுவரை ஏற்பட்டதே இல்லை. இதனால் அங்குப் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இதனால் பல்வேறு தரப்பினரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "பல மணி நேரமாக இங்குச் சாலையில் நிற்கிறோம். ஹோட்டல்களிலும் ரூம் இல்லை. இதனால் இரவில் தங்கள் கார்களில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் காரிலேயே சிக்கிவிட்டோம். குழந்தைகளுடன் சிரமப்படுகிறோம். கழிப்பறை வசதி கூட இல்லை. பனிப்பொழிவுக்கு ஏற்பட அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்" என்றார்.
சாப்பிடக்கூட எதுவும் இல்லை
எதுவும் சாப்பிடக் கூட பிஸ்கட், சிப்ஸ் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லையாம். 24 மணி நேரத்திற்கும் மேலாக காரிலேயே சிக்கி, தண்ணீர் மட்டுமே குடித்து, தூக்கமின்றி, உணவின்றியும் தவித்து வருவதாகப் புலம்பித் தள்ளியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக 835 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இன்று புதிய மேற்குத் திசை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகப் பலத்த பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications