மணிப்பூரில் முடிவுக்கு வரும் ஜனாதிபதி ஆட்சி! சைலண்ட் ஆக காய் நகர்த்திய பாஜக.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு
இம்பால்: ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக யும் நம் ஹேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் வன்முறை காரணமாக பாஜகவை சேர்ந்த முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்து இருந்தார். மணிப்பூரில் ஓராண்டாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், தற்போது பாஜக சைலண்ட் ஆக காய் நகர்த்தியுள்ளது.

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை கட்டுக்கடங்காமல் போனது.
நிலைமை கையை மீறி போனதால் மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் முதல்வாராக இருந்த பைரன் சிங் தனது பதவியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
ஹேம்சந்த் சிங் தேர்வு
ஓராண்டாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டியுள்ளது. தற்போது மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இந்த முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதன்படி, மணிப்பூர் முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான யும் நம் ஹேம்சந்த் சிங் மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கட்சி மேலிடம் ஆலோசனைக்குப் பிறகு இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மணிப்பூர் மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி அமைச்சர்
மணிப்பூரில் பைரன் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போது அவரது அமைச்சரவையில், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், நகர்புற நிர்வாகம், வீட்டு வசதி மேம்பாட்டு கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில சட்டமன்றம் செயல்பாடு இல்லாமல் வைக்கப்பட்டது. கலைக்கப்படவில்லை. மணிப்பூரில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் பாஜகவிற்கு 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications