மணிப்பூர்: 7-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்- எதிர்க்கட்சிகளின் ஓயாத முழக்கம்!
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று 7-வது நாளாக முடங்கியது. ராஜ்யசபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மணிப்பூரில் 3 மாதங்களாக குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையே மோதல்கள் தொடருகின்றன. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் 50,000 பேர் மணிப்பூர் குவிக்கப்பட்ட நிலையில் வன்முறைகள் தொடருகின்றன.

மணிப்பூர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.
மணிப்பூரில் அண்மையில் குக்கி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக மைத்தேயி இனக்குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ இந்தியாவை அதிர்ச்சியில் உறைய செய்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மணிப்பூர் மண்ணில் நிகழ்ந்து வரும் கொடூரங்களை அம்பலப்படுத்தியது இந்த வீடியோ.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தரக் கோரி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல லோக்சபா, ராஜ்யசபாவில் இது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானமு9ம் கொடுத்து வந்தனர். ஆனாலும் பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை.
இதற்கு பதிலடியாக, மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்ருக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று 7-வது நாளாக நாடாளுமன்ற லோக்சபா நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இன்று காலை சபை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் நீடித்ததால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் செல்ல இருக்கிறது. 18 கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தக் குழுவில் இடம் பெற உள்ளனர். இக்குழுவில் இடம் பெறும் எம்.பி.க்கள் விவரம் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications