பற்றி எரியும் மணிப்பூர்.. பின்னணியில் சீனா? பகீர் தகவலை சொன்ன முன்னாள் ராணுவ ஜெனரல் நரவனே
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், இதற்குப் பின்னணியில் சீனா இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே கூறிய கருத்துகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. கடந்த மே முதல் வாரத்தில் தொடங்கிய வன்முறை இப்போது வரை தொடர்ந்தே வருகிறது.
குறிப்பாக அங்கே மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைப்பதாக இருந்தது.

மணிப்பூர் வன்முறை: அங்கு வன்முறையைத் தடுக்க போலீசார், ஆயுத படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல வாரங்களாக அங்கு இணையச் சேவையும் கூட முடக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அங்கே வன்முறை குறையவே இல்லை. சமீபத்தில் கூட அங்குத் தமிழர்கள் அதிகம் வாழும் மோரே பகுதியில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின.. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், இதற்குப் பின்னணியில் சீனா இருக்கலாம் என்று முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஈடுபாட்டு இருக்கிறது என்றும் அங்குள்ள பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்குச் சீனாவிடம் இருந்து உதவி கிடைப்பதை மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனரல் நரவனே: டெல்லியில் உள்ள இந்தியச் சர்வதேச மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்ட ஜெனரல் நரவனே, "எந்தவொரு நாட்டிற்கும் உள்நாட்டு பாதுகாப்பு ரொம்பவே முக்கியமானது. நமது அண்டை நாட்டில் மட்டுமல்ல, நமது எல்லையிலும் உறுதியற்ற தன்மை இருந்தால். இது ஒட்டுமொத்த தேசியப் பாதுகாப்பிற்கு மோசமானதாக மாறும்" என்று அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், அங்கே அமைதியை நிலைநாட்ட அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி எம்.எம்.நரவனே நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா கனெக்ஷன்: அவர் தொடர்ந்து பேசுகையில், "மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வார்கள் என்பதை நான் நம்புகிறார்கள். அவர்களை நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. நாட்டில் உறுதியற்ற தன்மை இருந்தால் அது தேசியப் பாதுகாப்பிற்கு நிச்சயம் உதவாது. நிலைமை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது களத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும்.
இதில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை நிராகரிக்க முடியாது. நிச்சயம் இதில் வெளிநாட்டு அமைப்புகளின் தலையீடு இருக்கிறது. குறிப்பாகச் சீனாவின் உதவி. அங்குள்ள பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கு, சீனா பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது. இப்போதும் அதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
அதிகம் பயனடைவது யார்: இந்த வன்முறையால் சில ஏஜென்சிகளுக்கு லாபம் இருக்கும். இதனால் அவர்கள் அங்கு இயல்பு நிலை திரும்புவதை விரும்ப மாட்டார்கள்.. இதுபோல அங்கே உறுதியற்ற தன்மை இருக்கும்போது அவர்கள் தான் அதிகம் பயனடைவார்கள். மத்திய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும், வன்முறையை அங்குத் தொடர இதுவே காரணம்" என்று அவர் தெரிவித்தார்.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக இனக் கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்குச் சென்றபோது, அங்குஅமைதியை மீட்டெடுக்கப் பல நடவடிக்கைகளை அறிவித்தார். இருந்த போதிலும், அங்கே வன்முறை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications