மே 21க்குள் சிறையில் தள்ளாவிட்டால் அடுத்தகட்ட முடிவு! கெடு விதித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்!
டெல்லி : உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை மே 21ஆம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் அடுத்தகட்டத்திற்கு தயாராவோம் எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 23-ஆம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத், விவசாய சங்கங்களின் தலைவர்களான மெஹர் சிங், பல்தேவ் சிங் சிர்சா ஆகியோர் மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பிரிஜ் பூஷனை கைது செய்ய அரசை வற்புறுத்துவோம் என்றும் முடிவு செய்துள்ளோம். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் எப்படி போராடினார்களோ, அதே வழியில் மல்யுத்த வீரர்களும் தங்கள் போராட்டத்தை தொடருவார்கள். எங்கள் பொறுமையை அரசாங்கம் சோதிக்க வேண்டாம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக டெல்லி உட்பட நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெரிதாகும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். "மே 21ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்தகட்ட முடிவை எடுப்போம். எங்கள் போராட்டத்தை யாரும் ஹைஜாக் செய்யவில்லை.

அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் மக்கள் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த மக்கள் எங்களை மதிக்கிறார்கள், எங்கள் கண்ணியத்தில் அக்கறை கொள்கிறார்கள். கடவுள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், நாங்கள் நிச்சயமாக விளையாடுவோம்." எனத் தெரிவித்துள்ளார் வினேஷ் போகட்.
தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, பிரிஜ் பூஷனை இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவரை சிறைக்கு அனுப்பும் வரை தாங்கள் நகர மாட்டோம், போராட்டத்தில் இருந்து பின்வாங்க மட்டோம் என்று மல்யுத்த வீரர்கள் - வீராங்கனைகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது மே 21ஆம் தேதி என கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications