மத்திய பாஜக அரசின் 'ஒரே நாடு' கோட்பாடால் இந்தியா சிதறுண்டு உடையும்-ராஜ்யசபாவில் வைகோ எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவின் பலவகையான தேசிய இனங்களையும், பண்பாடுகளையும், நாகரிகங்களையும் அழித்து, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று ஆக்க முயன்றால் அது பேரழிவை உண்டாக்கும்; ஒவ்வொரு தேசிய இனத்தவரும் தங்கள் இன அடையாளத்தை அழிக்க விடமாட்டார்கள்; அப்படி அழிக்க முயன்றால் இந்தியா சிதறுண்டு உடையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் வைகோ பேசியதாவது: இந்த நாடு எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறது? அழிவுப் பாதையிலா, சர்வாதிகாரப் பாதையிலா என்பது குறித்து முக்கியமான சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய உபகண்டம் ஜனநாயகப் பாதையில் போவதா? அல்லது சர்வாதிகாரப் பாதையில் போவதா? என்ற தடுமாற்றத்திலும், நெருக்கடியிலும் உள்ளது.

முசோலி, ஹிட்லரின் வழிகாட்டு நூல்
இத்தாலியில் உள்ள புளோரன்° நகரத்தில் வாழ்ந்த மார்க்கியவல்லி 'தி பிரின்°' என்ற ஒரு நூல் எழுதினார். அதை முசோலினியும், ஹிட்லரும் தங்களுடைய வழிகாட்டும் நூலாக வைத்துக் கொண்டனர். அதில் மூன்று முக்கிய கருத்துகளைக் கூறினார். முதலாவது ஆளுபவர்கள் செய்வது அனைத்தும் சரியே. அது நியாயத்துக்கு உட்பட்டது. இரண்டாவது தேவை. தேவை ஏற்படின் அதற்கு எந்த சட்ட விதிமுறைகளும் கிடையாது. மூன்றாவது முக்கியமானது. உங்கள் செயலின் முடிவு நீங்கள் மேற்கொண்ட வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது. எத்தகைய இழிவான செயல்களை வேண்டுமானாலும் செய்து உங்கள் இலக்கை அடையலாம்.
தமிழர் பண்பாடும் திருவள்ளுவர் அறிவுரையும்
ஆனால் எங்கள் திருவள்ளுவர், உலகம் போற்றும் அறிவாசான் இதற்கு நேர்மாறானக் கருத்தைக் கூறுகிறார். தாய் பசித்திருந்தாலும் அதற்காக இழிவான செயல்களை செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்.
ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
இதுதான் 2000 ஆண்டுகால தமிழர்களின் பண்பாடு. நான் என் நாடு அழிவை நோக்கிச் செல்கிறதோ என்று அச்சப்படுகின்றேன்.
இந்தியா என்பது ஒரே நாடு தானா?
இப்போது ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி என்கிறார்கள். இது என்ன அநீதி? இந்திய பல தேசிய இனங்களைக் கொண்ட, பன்முகத் தன்மையுடைய பண்பாடுகளைக் கொண்ட உபகண்டமாகும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற நாடு கிடையாது. பல சமஸ்தானங்களையும் ராஜ்யங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டினர்.

இப்போது இந்தியா என்ற கருத்து ஒரு நாடு என்று மாறியுள்ளது. ஆனால் இது பல தேசிய இனங்களை கொண்ட நாடு. நான் தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்தவன். அருகில் அமரந்திருக்கும் சகோதரி மராட்டிய இனத்தைச் சேர்ந்தவர்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கினோம்.
ஒரே நாடு ஒரே பண்பாடு- இந்தியா சிதறுண்டு உடையும்
ஆனால் நீங்கள் ஒரே நாடு; இந்தி நாடு, ஒரே மொழி இந்தி சம°கிருதம் என்று உருவாக்க முயன்றால் சோவியத் ஒன்றியத்தைப் போல் சிதறுண்டு போகும். ஏனென்றால், இந்தியா வேறுபட்ட பண்பாடுகளைப் பின்பற்றுகிற தேசிய இனங்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று பண்டிட் ஜவஹர்லால் நேரு பிரகடனப்படுத்தினார். நீங்கள் பலவகையான தேசிய இனங்களையும், பண்பாடுகளையும், நாகரிகங்களையும் அழித்து, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று ஆக்க முயன்றால் அது பேரழிவை உண்டாக்கும். ஒவ்வொரு தேசிய இனத்தவரும் தங்கள் இன அடையாளத்தை அழிக்க விடமாட்டார்கள். அப்படி அழிக்க முயன்றால் இந்தியா சிதறுண்டு உடையும்.
ஏன் இந்த பிற்போக்கு நடவடிக்கை?
இந்த அவையில் 1963 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொன்மை வாய்ந்த தமிழ், இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரு மொழி; ஒரு பண்பாடு என்பதே பாஜக அரசின் முழக்கம். அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான இத்தகைய போக்குகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பெரும்பாலான மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு எதிராக இருக்கும் போது, ஏன் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கையை தொடர்கின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வக்ஃப் மசோதாவை எதிர்க்கிறேன்
ஜனாதிபதி உரையில் வக்ஃப் (திருத்த) மசோதா குறித்தும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மசோதாவை ஏற்கச் செய்து, அவர்களிடமிருந்து அறிக்கையைப் பெற்று அவசர அவசரமாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே சிறுபான்மையினருக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த அடிப்படை உரிமைகளை பறிப்பதால் இந்த மசோதாவை கடுமையாக
எதிர்க்கிறேன்.
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு
பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது பாஜக சங்பரிவாரர்களால் மேற்கொள்ளப்படும் மற்றொரு தவறான முயற்சியாகும். நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் மதப் பிரிவுகளால் வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. எனவே, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியும் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையை அழித்துவிடும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கேள்விக்கு உள்ளாக்கபடும். அத்தகைய முயற்சியை எங்களது முழு சக்தியைக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.
தமிழ்நாட்டில் கூடுதல் அணு உலைகளா?
நமது பிரதமர் அவர்கள் அணுமின் நிலையத்தை வலியுறுத்துகிறார். மேலும் கூடுதலாக அணுஉலைகள் தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 1988 செப்டம்பர் 22 ஆம் தேதி இதே மாநிலங்களவையில் அன்றைய பிரதமர் அணுமின் நிலையம் அமைப்பதற்கு சோவியத் ரஷ்யாவுடன் உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது என்றார். அப்போது, எந்த இடத்தில் அமைக்கப் போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் பதில் அளிக்கவில்லை. எந்த இடத்தில் அமையப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நான்கு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராடி வருகிறார்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம் விபத்துக்கு உள்ளாகி இலட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் ஒரு மைல் தீவில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோனார்கள்.
இப்போது மறுபடியும் தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் தொடங்க முயற்சிக்கிறார்கள். ஆகவே நெருப்போடு விளையாடாதீர்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications