சீண்டிய லலித் மோடி, மல்லையா.. “மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவோம்” - வெளியுறவு அமைச்சகம் உறுதி!
டெல்லி: "நாங்கள் தான் இந்தியாவால் தேடப்படும் மிகப்பெரும் குற்றவாளிகள்" என்று பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் லலித் மோடி, விஜய் மல்லையாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மௌனம் கலைத்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முதன் முதலில் தொடங்கிய லலித் மோடி மீது பல பொருளாதார குற்ற வழக்குகள் உள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டு அவர் லண்டனுக்கு தப்பியோடினார்.

இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற லலித் மோடி, தாங்கள் தான் நாட்டைவிட்டு தப்பி ஓடிய பெரும் குற்றவாளிகள் என்று இந்தியாவை சீண்டும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகள், தப்பி ஓடியவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். இதற்காக பல அரசுகளுடன் பேச்சு நடத்துகிறோம்.
இந்த வழக்குகளில் பலவற்றில் பல அடுக்கு சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால், அவர்கள் இங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உறுதி பூண்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications