மேகதாது விவகாரம்.. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து.. தமிழக அரசு மேல்முறையீடு!
டெல்லி: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது
மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜூன் 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தது

தமிழக அரசு மனு
அதை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கர்நாடகாவின் மறுஆய்வு மனுவை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த அமர்வு விசாரிக்க வேண்டும், அல்லது பசுமை தீர்ப்பாய தலைவர் என்ன காரணத்துக்காக வழக்கு மாற்றப்படுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்பதே பசுமை தீர்ப்பாயத்தின் விதியாக உள்ள நிலையில், அதனை மீறி வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது,

அவகாசம் கொடுக்கவில்லை
இதனால் இந்த விவகாரத்தில் விசாரணை வரம்பு எல்லையும் மீறப்பட்டுள்ளது. இப்படி தீர்ப்பாய விதிகளுக்கு முரணாகவே மறுஆய்வு மனு விசாரிக்கப்பட்டு, தென்மண்டல பசுமை நீர்ப்பாயத்தின் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வானது, கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவுக்கு உரிய விளக்கத்தை தமிழ்நாடு தரப்பில் வழங்க அவகாசம் கொடுக்காமலும், கருத்தை கேட்காமலும் ஆய்வுக்குழுவை கலைத்து தீர்ப்பளித்துள்ளது

உரிய அனுமதி இல்லை
அதேபோல உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது . அதேவேளையில் டி.பி.ஆர் எனப்படும் திட்ட அறிக்கையை பிரதான வழக்கில் எதிர்த்ததை கணக்கில் கொள்ளவில்லை. சூற்றுசூழலை பாதுகாக்கவும், உரிய அனுமதி இல்லாமல் வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பதை தடுக்ககவும், கட்டுமானங்களை தடுக்கவும் பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உண்டு.

கெள்கையை மீறும் செயல்
அந்த வகையில், பத்திரிகை செய்தி அடிப்படையிலும், பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயமானது மேகதாது பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது. ஆனால் இந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, தாக்கம் ஆகியவை குறித்த எந்த விவகாரத்தையும் "தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு" கருத்தில் கொள்ளாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்துள்ளது, இது சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் அடிப்படை கெள்கையையே மீறும் செயல் ஆகும்.

இறுதி செய்ய வேண்டும்
அதேவேளையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தான் குழுவை அமைத்தது என்றும் அணை அமைக்கும் முயற்சிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் இத்தகைய குழு இருப்பது மிகவும் அவசியம் அதேபோல கர்நாடக அரசு தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் 2018 உத்தரவை பொருட்படுத்தாமல் அதனை மீறி மேகதாது அணை கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே தென்மண்டல தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications