100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு.. கண்டனம் தெரிவித்து டெல்லியில் இன்று போராட்டம்
100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டை விட 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று பயனாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 33% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட ரூ. 60 ஆயிரம் கோடி நிதி குறைவாக நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு அதற்கான சம்பளம் வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் வாழும் எளிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைக்கப்பட்டு இருப்பது, பல்வேறு பாதிப்புகளையும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனக்கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்ட பயனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications