Irrelevant Question.. டெல்லி பிரஸ் மீட்டில் வந்து விழுந்த கேள்வியால் டென்ஷனான அமைச்சர் துரைமுருகன்!
டெல்லி: டெல்லியில் இன்று மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "Irrelevant Question" என சற்று கோபமாக பதில் அளித்தார்.
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பிரச்சனைகள் எழுந்து வருகிறது. இந்தச் சூழலில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் மீட்டிங்: இந்தச் சந்திப்பின்போது, காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அவரிடம் அளித்தார்.
மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா அரசு போதுமான அளவு இன்னும் திறக்காத நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு உடனடியாக பெற்றுத்தர மத்திய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
பிரஸ் மீட்: இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு மெத்தனமாக உள்ளது.
கர்நாடகா அரசு நீர் வழங்காததால் தமிழகத்திற்கு 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் வாடும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாட்டுக்கு உடனடியாக 22.54 டி.எம்.சி. நீரை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்: காவரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் எந்த பேச்சுவார்த்தையும் பயனில்லை. பேச்சுவார்த்தையால் பயனில்லை என்பதால் தான் ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் வழங்கினேன். முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் அவருக்கு மதிப்பளித்தாக வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்." என்றார்.
மேலும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் பேசியது பற்றி பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது, ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சட்டென பதில் சொன்ன துரைமுருகன்: கர்நாடகா காங்கிரஸ் அரசு காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படுவதால் திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன், "இந்த மாதிரி வேலையெல்லாம் எங்களிடம் கிடையாது. I am very sorry. Irrelevant Question" என வேகமாக பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications